அமெரிக்க பேச்சுவார்த்தை குழு இன்று பாக். பயணம் ஒப்பந்தம் செய்யாவிட்டால் ஈரான் அழிக்கப்படும்
அமெரிக்க பேச்சுவார்த்தை குழு இன்று பாகிஸ்தான் செல்வதாக அறிவித்த அதிபர் டிரம்ப், இதில் ஈரான் ஒப்பந்தம் செய்யாவிட்டால் அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள், பாலங்கள் அழிக்கப்படும் என மீண்டும் ஒருமுறை எச்சரித்துள்ளார். ஈரான் துறைமுகங்களை முற்றுகையிடும் அமெரிக்க கடற்படையின் நடவடிக்கை தொடர்வதால், தங்கள் தரப்பில் பேச்சுவார்த்தை குழு அனுப்பப்படவில்லை என ஈரான் கூறியிருக்கிறது. அமெரிக்கா-ஈரான் இடையேயான 2 வார கால போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை மறுதினத்துடன் முடிவடைகிறது.
இதற்கு முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையே 2ம் கட்ட பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்ய பாகிஸ்தான் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். லெபனானில் இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே 10 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதை வரவேற்று, ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதாக ஈரான் நேற்று முன்தினம் அறிவித்தது.
ஆனால், ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படும் வரையிலும், அந்நாட்டின் துறைமுகங்களில் இருந்து வரும் கப்பல்களை தடுக்கக் கூடிய அமெரிக்க கடற்படையின் முற்றுகை முழு வீச்சில் நீடிக்கும் என டிரம்ப் கூறியது ஈரானை வெறுப்பேற்றியது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்ததோடு, அப்பகுதியை கடந்த இந்தியாவின் 2 எண்ணெய் கப்பல்கள் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை தாக்குதல் நடத்தியது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply