பாக்.கில் இருந்து ஈரான் வெளியுறவு அமைச்சர் புறப்பட்டார் அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை இல்லை: ஈரான் அறிவிப்பு
அமெரிக்க பிரதிநிதிகளை சந்திக்காமலேயே ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி பாகிஸ்தானில் இருந்து நேற்று புறப்பட்டார். அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையே கடந்த 8ம் தேதி 2 வார கால போர் நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இரு தரப்பிலும் முதல்கட்ட அமைதி பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடந்தது. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தததைத் தொடர்ந்து, போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, இருதரப்பிலும் 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய பாகிஸ்தான் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திற்கு பயணம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் மற்றும் டிரம்பின் ஆலோசகர் ஜெரெட் குஷ்னர் இருவரும் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த நேற்று பாகிஸ்தானுக்கு புறப்படுவதாக தகவல்கள் வெளியாகின. நேரில் சந்தித்து பேச வேண்டும் என ஈரானே அமெரிக்காவை கேட்டுக் கொண்டதால், பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் நடப்பதாக வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் கூறினார்.
இதனால் 2ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சகம் இத்தகவலை திட்டவட்டமாக மறுத்தது. அமெரிக்காவுடன் எந்த நேரடி பேச்சுவார்த்தைக்கும் ஈரான் தயாராக இல்லை என்றும், ஈரானின் கருத்துக்கள் பாகிஸ்தானிடம் தெரிவிக்கப்படும் என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அதே போல, இஸ்லாமாபாத்தில் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் மற்றும் பிற அதிகாரிகளை நேற்று சந்தித்து பேசினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply