தமிழகத்தில் 234 தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரம் காலை 10 மணிக்கு தெரியும்: வாக்கு எண்ணும் மையங்களில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு
தமிழகத்தில் 234 தொகுதிகளில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முன்னணி நிலவரம் காலை10 மணிக்கு தொகுதி வாரியாக தெரிய வரும். வாக்கு எண்ணும் மையங்களில் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி நடந்தது. தமிழகத்தில் திமுக தலைமையிலான அணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மநீம, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படை மற்றும் தமிழர் தேசம் கட்சி ஆகிய கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமையிலான அணியில் பாஜ, பாமக (அன்புமணி), அமமுக, தமாகா, ஐஜேகே, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. நடிகர் விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சிகள் தனித்து தேர்தலை சந்தித்தன. மொத்தமுள்ள 234 தொகுதியிலும் 4023 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை ஆவார்.
இந்த தேர்தலில் 5 கோடியே 73 லட்சத்து 43,291 பேர் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர். இதில் 4 கோடியே 87 லட்சத்து 98,833 பேர் வாக்களித்தனர். இது 85.10 சதவீதம் ஆகும். வாக்குப்பதிவு முடிந்ததும் 75,064 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு அந்தந்த மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்குள்ள ஸ்டாங் ரூமில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு எண்ணப்படுகிறது. மொத்தம் 62 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகிறது. காலை 8 மணிக்கு தபால் ஓட்டுக்கள் எண்ணப்படும். அதைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கும். அனைத்து சட்டமன்ற தொகுதிகளின் சுற்று வாரியான முடிவுகள் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் அந்தந்த மையங்களில் உள்ள பொது ஒலிபெருக்கி அமைப்பு மூலம் அறிவிக்கப்படும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply