இருதரப்பு உறவை மேம்படுத்த முடிவு; இத்தாலி பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை: 20 பில்லியன் யூரோ வர்த்தக இலக்கு நிர்ணயம்

பிரதமர் மோடி, இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி இடையேயான சந்திப்பில் இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. 2029ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 20 பில்லியன் யூரோ டாலருக்கு உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த 15ம் தேதி 5 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இதில் ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே நாடுகளைத் தொடர்ந்து இறுதிகட்டமாக இத்தாலி நாட்டிற்கு நேற்று முன்தினம் இரவு சென்றடைந்தார். தலைநகர் ரோமில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, பிரதமர் மோடிக்கு இரவு விருந்து அளித்தார்.

அப்போது, இரு தலைவர்களும் ஒரே காரில், புகழ்பெற்ற கொலோசியத்திற்கு சென்றனர். அங்கு பிரதமர் மெலோனியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம், ரோம் நகரை அவர் சுற்றிக் காட்டிய புகைப்படங்களை பிரதமர் மோடி தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்தார். இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி நேற்று இத்தாலி அதிபர் செர்ஜியோ மட்டரெல்லாவை சந்தித்து, வர்த்தகம், முதலீடு மற்றும் கலாச்சார தொடர்புகள் உள்ளிட்ட இந்தியா-இத்தாலி நட்புறவு தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தார். செயற்கை நுண்ணறிவு, முக்கிய கனிமங்கள், விண்வெளி மற்றும் அணுசக்தி போன்ற துறைகளில் ஒத்துழைப்பது குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply