ஆப்கானிஸ்தானில் வறுமையின் உச்சம்! 7 வயது மகளை திருமண சந்தையில் விற்கத் துணியும் தந்தை
தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானின் கோர் (Ghor) மாகாணத்தில் நிலவி வரும் தீவிர வறுமை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்துப் புகழ்பெற்ற சர்வதேச ஊடகமான ‘பிபிசி’ (BBC) வெளியிட்டுள்ள களஆய்வு அறிக்கை உலகையே அதிரவைத்துள்ளது. அந்தப் பிராந்தியத்தில் கடுமையான உணவுப் பஞ்சம் நிலவி வருவதால், குடும்பத்தைக் காப்பாற்ற வேறு வழியின்றிப் பெற்ற தாயும் தந்தையும் தங்களது பச்சிளம் குழந்தைகளை விற்கும் கொடூரமான உறைபனி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, அங்குள்ள ஃபிரோஸ்கோ என்ற நகரின் வீதிகளில் தினக்கூலி வேலைக்காக நூற்றுக்கணக்கான ஆண்கள் காத்துக் கிடக்கும் அவலமும், உடைந்த ரொட்டித் துண்டுகளுக்காக மனிதர்கள் அடித்துக் கொள்ளும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
இந்தச் சூழலில், கோர் மாகாணத்தைச் சேர்ந்த அப்துல் ரஷீத் அசிமி (Abdul Rashid Azimi) என்ற தந்தை, வறுமையின் உச்சகட்டமாகத் தனது 7 வயது இரட்டைப் பெண் மகள்களான ரசியா மற்றும் ரஹிலா ஆகிய இருவரில் ஒருவரை விற்கத் துணிந்துள்ளார். தனது இரண்டு குழந்தைகளையும் கைகளில் அணைத்தபடி செய்தியாளர்களிடம் பேசிய அந்தத் தந்தை, கட்டுப்படுத்த முடியாமல் விம்மி அழுதுள்ளார். “நான் மிகவும் ஏழை, கடுமையான கடனில் மூழ்கித் தவித்து வருகிறேன்; முற்றிலும் உதவி செய்ய ஆளற்ற அனாதையாக நிற்கிறேன். என் உதடுகள் காய்ந்து, பசியோடும் தாகத்தோடும், மிகுந்த குழப்பத்தோடும் நான் வேலை தேடிவிட்டு வீட்டிற்குத் திரும்பும்போது, என் குழந்தைகள் ஓடிவந்து ‘பாபா, எங்களுக்கு கொஞ்சம் ரொட்டி கொடுங்கள்’ என்று கேட்கிறார்கள். ஆனால் என்னிடம் கொடுக்க என்ன இருக்கிறது? எங்கே இருக்கிறது வேலை?” என்று கண்ணீர் வடித்துள்ளார்.
தனது ஒரு மகளைக் கட்டியணைத்து முத்தமிட்டபடி, “நெஞ்சம் உடைகிறது, ஆனால் இதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை; ஒரு மகளை நான் விற்றால், அந்தப் பணத்தைக் கொண்டு மீதமுள்ள எனது மற்றக் குழந்தைகளை குறைந்தது 4 ஆண்டுகளுக்காவது என்னால் பட்டினியின்றி வாழ வைக்க முடியும்” என்று அந்தத் தந்தை கதறியுள்ளார். அவர்களின் தாயான கைஹான் கூறுகையில், தங்களது குடும்பத்திற்குச் சாப்பிட வெறும் காய்ந்த ரொட்டியும் சுடுதண்ணீரும் மட்டுமே கிடைப்பதாக நெகிழ்ச்சியடைந்துள்ளார். இதே மாகாணத்தைச் சேர்ந்த சயீத் அகமது என்ற மற்றொரு தந்தை, தனது 5 வயது மகள் ஷாயிகாவுக்கு ஏற்பட்ட குடல்வால் அழற்சி (Appendicitis) மற்றும் கல்லீரல் நீர்க்கட்டி பாதிப்பிற்கு மருத்துவச் செலவு செய்யப் பணமில்லாமல், அவளைத் தனது உறவினர் ஒருவருக்கு விற்று அந்தப் பணத்தில் அவளுக்கு அறுவைச் சிகிச்சை செய்துள்ள அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் (UN) அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஆப்கானிஸ்தானில் 4.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பஞ்சத்தின் விளிம்பில் உள்ளனர். சர்வதேச நாடுகள் தங்களது நிதியுதவிகளைக் குறைத்துக் கொண்டதாலும், பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் முடக்கப்பட்டதாலும், அந்நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் சரிந்து போயுள்ளது. பசி மற்றும் மருத்துவ வசதியின்மை காரணமாக கடந்த சில மாதங்களில் மட்டும் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆப்கானிஸ்தானில் மிகக் கொடூரமாக அதிகரித்துள்ளதாகச் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply