ஜனாதிபதி மஹிந்த தலைமையில் தேசிய வெற்றி விழா கொண்டாட்டம்

தேசிய வெற்றி விழா கொண்டாட்டம் மற்றும் இராணுவ அணிவகுப்பு வைபவம் எதிர்வரும் 18ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு கொழும்பு காலி முகத்திடலில் கோலாகலமாக நடை பெறவுள்ளது.இதேவேளை, அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு படைவீரர்களின் தேசிய நினைவு தின வைபவம் பாராளு மன்ற மைதானத்தில் நடைபெறவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுகளில் முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மாஅதிபர், சிவில் பாதுகாப்பு திணைக்களப் பணிப்பாளர் உட்பட பெருந்தொகையான படைவீரர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தேசிய வெற்றி விழா, இராணுவ அணிவகுப்பு, படைவீரர்களின் தேசிய நினைவு தின வைபவங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் அதன் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்லே தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் ரணவிரு சேவை அதிகார சபையின் தலைவர் பத்மா வேத்தேவ உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இராணுவப் பேச்சாளர் இங்கு மேலும் விளக்கமளிக்கையில்:-

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு 18ம் திகதி இந்தக் கொண்டாட்டங்கள் இடம்பெறவு ள்ளதனால் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. இம்முறை காலிமுகத்திடலில் நடைபெறவுள்ள இராணுவ அணிவகுப்பின் போது அதற்கு மேலதிகமாக இறுதிக்கட்ட படை நடவடிக்கையில் கலந்து கொண்ட பெரும்பாலான படைவீரர்கள் பங்கேற்று பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டமை தொடர்பான செயல்முறை விளக்கங்களையும் காண்பிக்கவுள்ளனர்.

இந்த அணிவகுப்பில் இராணுவத்தின் வழக்கமான அணிவகுப்பிற்கு மேலாக கடற்படையினரின் சாகசங்களும் விமானப் படையின் சாகசங்களும் இடம்பெறவுள்ளன.இந்த அணிவகுப்புகளை பொது மக்கள் பார்வையிடவும் பாரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply