ஜனாதிபதி மீதான நம்பிக்கையின் வெளிப்பாடாக மக்கள் மிகப்பெரிய வெற்றியை வழங்கியுள்ளனர்: டலஸ்
நடந்து முடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு நாட்டு மக்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளனர். இந்த தேர்தலின் மூலம் நாட்டு மக்கள் ஜனாதிபதி மீதான பாரிய நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் நாட்டு மக்களுக்கு அரசாங்கம் சார்பில் நன்றிகளை தெரிவிக்கின்றோம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஆளும் கட்சி பெற்றுக்கொண்டுள்ள வெற்றி தொடர்பில் தகவல் வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது உள்ளூராட்சி தேர்தல் நடைபெற்ற 234 சபைகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 205 சபைகளை கைப்பற்றியுள்ளது. இது ஆறில் ஐந்து மடங்கு என்ற வகையிலான வெற்றியாகும்.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சி சரிவை கண்டுள்ளதுடன் மக்கள் விடுதலை முன்னணி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் 325 உறுப்பினர்கள் 56 உறுப்பினர்களாக குறைவடைந்துள்ளனர்.
மேலும் வடக்கு, கிழக்கில் ஜனநாயகமான முறையில் தேர்தல் நடைபெற்றுள்ளமை குறித்தும் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். வடக்கு கிழக்கு மக்கள் ஜனநாயகமாக வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்திக்கொடுத்தோம்.
எனவே ஐக்கிய தேசியக் கட்சி தனது தோல்வி தொடர்பில் தேர்தல் திணைக்களத்தை குறைகூறாமல் தோல்விக்கான காரணத்தை ஆய்வு செய்ய முன்வரவேண்டும். பலமான எதிர்க்கட்சி ஒன்று இருக்கவேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply