ஐ.சி.ஆர்.சி.யின் வவுனியா அலுவலகம் மூடப்பட்டது
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தனது வவுனியா அலுவலகத்தை நேற்றுடன் மூடியுள்ளது. இதன்படி வட பகுதியியில் இயங்கிவந்த ஐ.சி.ஆர்.சி.யின் ஒரேயொரு அலுவலகத்தின் பணிகளும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்தவாறு தமது பணிகளை முன்னெடுக்குமாறு அரசாங்கம் விடுத்த வேண்டுகோளினையடுத்தே வவுனியா அலுவலகத்தை மூடி விடவும், கொழும்பு அலுவலகத்தின் மூலம் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானித்ததாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐ.சீ.ஆர்,சி.யின் கொழும்பு அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
பாதுகாப்பு சூழ்நிலைகளினால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு உதவுவதற்கென 1987ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் தமது அலுவலகத்தை திறந்தது. 1989 ஆம் ஆண்டு முதல் வவுனியா பிரதேசத்தில் ஐ.சீ.ஆர்.சி. மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டுவந்த நிலையில் வவுனியா அலுவலகம் 1997இல் திறக்கப்பட்டது. அதன்மூலம் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களுக்கும் பணிகளை விஸ்தரிக்கக் கூடியதாக இருந்தது.
நடுநிலைச் செயற்பாட்டாளர் என்ற அடிப்படையில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இரு தரப்பினரதும் ஒத்துழைப்புடன் பாதுகாப்பு மற்றும் உதவிகளை சங்கம் வழங்கியது. குறிப்பாக மருத்துவ சேவைகளை கிடைக்கச் செய்யும் விடயத்திலும் காயமடைந்தவர்கள் மற்றும் சடலங்களை கொண்டுவரும் பணிகளிலும் உதவியது.
இப்போது அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் வவுனியா அலுவலகம் மூடப்படுகின்றபோதிலும், யுத்தம் காரணமாக ஏற்பட்ட மனிதாபிமான தேவைகள் தொடர்பில் தொடர்ந்தும் உதவிகளை வழங்குவதற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply