அரசு இஸ்ரேல் கடைப்பிடிக்கும் வழிமுறையை பின்பற்றுகின்றது : சுரேஷ்
பாலஸ்தீனத்தை தனிநாடாக்கக் கோரும் அரசு பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் கடைப் பிடிக்கும் மோசமான வழிமுறைகளையே நமது தமிழ் மண்ணில் தமிழர் தாயகத்தில் பின்பற்றுகின்றது என்று யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் செயலாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.
கல்முனை மாநகர சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் கல்முனை பிரதான வீதியில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் பேராசிரியர் எம்.இராஜேஸ்வரன் தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இன்று அரசாங்கம் வடக்கில் மட்டுமல்ல, கிழக்கிலும் இராணுவத்தை நிலை கொள்ளவைக்கும் நடவடிக்கையிலேயே முனைப்பாக மேற்கொண்டு வருகின்றது.
நிரந்தரமாக இராணுவ நிலைகளை உருவாக்குவது முகவர்களை உருவாக்குவது இராணுவத்திற்கான குடியிருப்புக்களை உருவாக்குவது போன்ற செயற்பாடுகள் இடம்பெற்றன. இதனோடு வடக்கு கிழக்கில் பரந்துப்பட்ட நிலையில் இராணுவம் குடியமர்த்தப்படுமாகவிருந்தால் அங்கு இதன் பிற்பாடு சிங்கள மக்களை குடியேற்றவும் அவர்களுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையையும் ஏற்படுத்த முடியுமென்ற திட்டமிட்ட செயற்பாடு அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.
இதனால் எவரும் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்படுவதுடன் அரசாங்கம் தான் விரும்பியவற்றை நடத்தலாம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் முப்பது வீதம் சிங்கள மக்களை குடியேற்ற வேண்டும் என்ற கொள்கையினடிப்படையில் தான் அரசு இயங்கி வருகின்றது. இந்த நிலையில் தான் அரசின் மீது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சர்வதேசத்தினால் சுமத்தப்பட்டு அரசு பெரும் இக்கட்டில் மாட்டிக் கொண்டுள்ளது. விடுதலைப் புலிகள் காலத்தில் யுத்தம் நடந்தது, அதற்கு முன்பு தந்தை செல்வா அஹிம்சை முறையில் போராடினார், 30 வருடங்களுக்கு மேலாகப் போராடினார்.
அப்பொழுது இலங்கையில் அஹிம்சைப் போராட்டமொன்று நடப்பதாக உலகத்திற்கு தெரியாது. தமிழ் மக்கள் எவ்வளவு தூரம் துன்புறுத்தப்படுகின்றனர் தமிழ் மக்களின் நிலங்கள் எந்தளவு கபளீகரம் செய்யப்படுகின்றது என்பதும் அன்று உலகுக்குத் தெரியாது.
ஆனால் ஆயுதப் போராட்டமொன்று தொடங்கிய பொழுது அந்தப் போராட்டம் ஓரளவுக்கு வெளியே தெரிய வந்தது. ஆனாலும் அதற்கான ஆதரவு கிடைக்கவில்லை.
இறுதி யுத்தம் நடைபெற்று முடிந்த பின்பு புலிகள் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அந்தப் போராட்டமென்பது மக்களின் இவ்வளவு இழப்பு என்பதுடன் இன்று சர்வதேச சமூகம் தமிழ் மக்களுக்கு நியாயமான பிரச்சினை இருக்கின்றது.
தமிழ் மக்கள் இந்த இலங்கை மண்ணில் சரிசமனாக நடத்தப்படவில்லை. அவர்கள் இரண்டாம் தரப்பிரஜைகளாக நடத்தப்படுகின்றனர். அந்த மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வு தேவை. இலங்கை அரசாங்கம் அதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டுமெனக் கூறும் அளவுக்கு நிலைமைகள் மாறியுள்ளன.
அது மட்டுமன்றி இலங்கை அரசியலை இராணுவ மயப்படுத்தும் திட்டமும் தெரிந்து அது பிழை இராணுவம் அப்புறப்படுத்தப்பட்டு பொலிஸார் தான் சட்டம் ஒழுங்கை கவனிக்க வேண்டுமெனவும் உலகம் சொல்லியுள்ளது.
அதே வேளை இலங்கை அரசுக்குப் பாரிய நெருக்குதல்கள் இன்று ஏற்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை அரசு தன்னைப் பாதுகாக்க ஜனாதிபதி தன்னைப் பாதுகாத்துக் கொள்ள கோட்டாயபாய ராஜபக்ஷ தன்னை பாதுகாத்துக் கொள்ள ஏன் ராஜபக்ஷ குடும்பத்தையே பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் நிச்சயம் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியது மாத்திரமல்ல தமிழ் மக்களுடைய உரிமைகளைக் கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கும் தள்ளப்படும் நிலை வந்துள்ளது.
இதுவெல்லாம் தமிழ் மக்கள் கொடுத்த விலையால் வந்துள்ள நிலையாகும். எமது தியாகம் நாம் கொடுத்த பலிகள் நிச்சயமாக நாம் தலைநிமிர்ந்து வாழும் நிலையை விரைவில் தோற்றுவிக்கும். நாங்கள் எமது மண்ணில் எம்மை ஆளக்கூடிய வகையில் வாழ்வோம்.
எவர் என்ன செய்தாலும் அரசு கூடிய பிரச்சினைகளை நமக்கு ஏற்படுத்தினாலும் கூட இன்று நிலைமை மாறிக் கொண்டு வருவதே உண்மையாகும்.
இதே வேளை நாங்கள் இந்த மண்ணில் வாழப் பிறந்தவர்கள் அதற்கு ஏற்றவகையில் நாங்கள் எங்களது உரிமைகளுடன் வாழ வேண்டும். இன்று ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரநிதிநியூடாக பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென உலகுக்குக் கூறியுள்ளார்.
எமக்கு முன்பாக பல தசாப்தங்களாக அந்த மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். எனவே தனி நாடு கோரிக்கை சரியானதே. ஆனால் அந்த பாலஸ்தீனத்தைத் தனிநாடாக்க வேண்டுமென்று கூறுபவர்கள் பாலஸ்தீனதிற்கு எதிராகவிருக்கும் இஸ்ரேல் அங்கு என்ன மோசமான வழிமுறைகளைப் பின்பற்றுகின்றதோ அதை இங்கும் தமிழ்ப் பிரதேசங்களில் பின்பற்றுகின்றனர் என்பதுதான் வேடிக்கையான வேதனையான விடயமாகும்.
பாலஸ்தீனத்தில் முஸ்லிம் மக்கள் வாழக்கூடிய காஸா பிரதேசம் போன்ற பல பிரதேசங்களில் இஸ்ரேலியக் குடியிருப்புக்கள் உருவாக்கப்படுகின்றன. பாலஸ்தீன மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் இவை உருவாக்கப்படுகின்றன.
இதே பாணியில் தான் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களை இன்று சூறையாடி கபளீகரம் பண்ணி அந்த மண்ணில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்க முயற்சிக்கின்றது.
பாலஸ்தீன மண்ணில் எப்படி இஸ்ரேலிய இராணுவம் நிலைக் கொண்டுள்ளதோ அதே போன்று தமிழ் மண்ணில் சிங்கள இராணுவத்தை நிலை நிறுத்துவதற்கான முழு வேலைகளையும் இலங்கை அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றது.
எனவே அப்படி இஸ்ரேலிய அரசு இஸ்ரேலிய இராணுவம் கடைப்பிடிக்கின்ற அவ்வளவு கபடத்தனமான மோசடித்தனமான அத்தனை வழிமுறைகளையும் இங்கு கடைபிடித்துக் கொண்டு பாலஸ்தீன மக்களின் தனி நாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பது நியாயமாகுமா?
மேலும் இன்று இலங்கை அரசாங்கம் நடத்தும் பேச்சுவார்த்தை விரும்பி முன் வந்து நடத்தும் பேச்சுவார்த்தையல்ல. அவர்கள் எம்முடன் பேச விரும்பவில்லை. எமது மக்களின் ஜனநாயகத் தீர்ப்பும் அதன் மூலம் கிடைத்த பலமும் காரணமாக ஏற்பட்ட சர்வதேச அழுத்தமே அரசை இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளது.
எனினும் ஒரு பக்கத்தில் பேச்சுவார்த்தையென்று சொல்லிக் கொண்டு மறு பக்கத்தில் முழுத்தமிழ் சமுதாயத்தையும் குழித்தோண்டிப் புதைக்கும் வேலையில் அரசு ஈடுபட்டுள்ளது. இவ்வாறானவர்களுடன் தான் நாம் பேசிக் கொண்டிருக்கின்றோம்.
எமக்கு பல விமர்சனங்கள் வரத்தான் வேண்டும் அவை ஆரோக்கியமான விமர்சனங்களாக அமைய வேண்டும். அவை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
ஆனால் சேறு அடிப்பது என்பது வேறு விமர்சனங்கள் முன்வைப்பதென்பது வேறு என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply