இலங்கையில் 23 உள்ளுராட்சி சபைகளுக்கு இன்று தேர்தல்

கொழும்பு மாநகர சபை உட்பட 23 உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் உட்பட தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.நீதியும் அமைதியுமான தேர்தலை உறுதி செய்யும் வகையில் காலையிலேயே நேர காலத்துடன் சென்று வாக்களிக்குமாறு அவர் வாக்காளர்களைக் கேட்டுக் கொள்கிறார்.

கொழும்பு, கண்டி, காலி, நுவரெலியா, கல்முனை மாநகர சபைகள் உட்பட 23 உள்ளூராட்சிச் சபைகளுக்கான இத் தேர்தலில் 420 வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்காக 1589622 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

மொத்தம் 6488 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களத்தில் இறங்கியுள்ளதுடன் 1167 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இன்று காலை 7.00 மணிமுதல் பிற்பகல் 4.00 மணி வரை இடம்பெறவுள்ளன. முதலாவது தேர்தல் முடிவுகளை இரவு 10 மணியளவில் வெளியிட முடியும் என தேர்தல் செயலகம் தெரிவித்தது.

கொழும்பு டி. எஸ். சேனநாயக்க வித்தியாலயம், கம்பஹா தக்ஷிலா வித்தியாலயம், அம்பாந்தோட்டை சுஜி வித்தியாலயம், பதுளை விசாகா வித்தியாலயம் உட்பட 13 நிலையங்களில் வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

இம்முறை உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 22,000 பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள் நேற்றைய தினம் தத்தமது பிரிவு வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

வாக்குப் பெட்டிகளை உரிய வாக்களிப்பு நிலையங்களுக்குக் கொண்டு செல்லும் நடவடிக்கைகள் நேற்றும் நேற்று முன்தினமும் நடைபெற்றன.

பாதுகாப்புக் கடமைகள் குறித்து கருத்துத் தெரிவித்த தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன் நீதியும் நேர்மையுமான தேர்தலை நடத்தும் வகையில் தேர்தல் இடம்பெறும் பிரதேசங்களில் பாதுகாப்பு நடவடிக் கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தேர்தல் வன்முறை தொடர்பான முறைப்பாடுகள் இம்முறை மிகக் குறைவாகவே பதிவாகியுள்ளதுடன் தேர்தல் வன்முறை தொடர்பில் 194 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

தேர்தல் நடைபெறும் 13 மாவட்டங்களிலுமுள்ள வாக்கெண்ணும் நிலையங்களில் வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் நிறைவுற்றதும் தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பப்பட்டு அவர் அதனை உறுதி செய்ததும் ஊடக பிரசுரங்களுக்கு வசதியாக தகவல் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டு அதனூடாக ஊடக நிறுவனங்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்றைய தேர்தலின் போது இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு விசேட தொலைநகல் வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் நடைபெறும் 13 மாவட்டங்களையும் இணைத்ததாக தேர்தல் செயலகத்தில் ஒருங்கிணைப்பு நிலையம் ஒன்று இயங்கவுள்ளதுடன் உரிய மாவட்டங்களிலிருந்து கிடைக்கும் முறைப்பாடுகள் இந்நிலையத்திற்கு உடனுக்குடன் அனுப்பப்படவுள்ளன.

தேர்தல் நடவடிக்கைகள் குறித்து கருத்துத் தெரிவித்த தேர்தல் ஆணையாளர் நேர காலத்தோடு வாக்களித்து வன்முறையற்ற அமைதியான தேர்தலுக்கு உதவுமாறு வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply