கட்சியின் நிலைப்பாடு குறித்து இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் : சுரேஸ்

கட்சியின் நிலைப்பாடு குறித்து இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான அரசியல் காரணிகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றது என்பது தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மாத்தாயுடன் இந்த விடயங்கள் குறித்து பேசப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
அரசாங்கத்துடன் நடத்தப்பட்டு வரும் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
 
தீர்வுத் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை விடவும் அரசாங்கம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் கூடுதல் முனைப்பு காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
கடந்த 3ம் திகதி நடைபெறவிருந்த பேச்சுவார்த்தைகள் ஒத்தி வைக்கப்பட்டதாகவும், அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கான திகதிகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
அதிகாரப் பகிர்வு தொடர்பில் அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்படும் இணக்கப்பாடுகள், உத்தேச பாராளுமன்றத் தெரிவுக்குழு யோசனையில் உள்ளடக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் முதலில் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட வேண்டும் எனவும், பின்னர் அது பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
அவ்வாறு இல்லையெனில் பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைப்பதில் அர்த்தமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ஏனைய தரப்பினர் இதனை எதிர்த்தால் என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு, அரசாங்கம் நினைத்தால் எதிர்ப்பை முறியடிக்க முடியும் என சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply