குறைந்தபட்ச பொலிஸ் அதிகாரங்களையாவது மாகாணசபைகளுக்கு வழங்குவது குறித்து ஆராய்வு: கெஹலிய
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவதில் சில சிக்கல்கள் உள்ளபோதிலும் குறைந்தபட்ச பொலிஸ் அதிகாரங்களையாவது வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது என்று அமைச்ச ரவையின் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்கான செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு கூறினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். அது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவதில் சில சிக்கல்கள் உள்ளன. இருந்தபோதிலும் ஒரு மட்டத்திலான பொலிஸ் அதிகாரத்தை வழங்க முடியுமா என அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இன்று நாட்டில் ஒரு சில பகுதிகளில் பொலிஸாருக்கும் பொது மக்களுக்குமிடையில் விரிசல் நிலவுவதாகக் கூறப்படுகிறது. அது தொடர்பாக ஆராய்ந்து அதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. எந்தக் காரணத்தை கொண்டும் சட்டத்தைக் கையில் எடுக்கும் அதிகாரம் பொது மக்களுக்கு கிடையாது. அவ்வாறு சட்டத்தைக் கையில் எடுப்போருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
உலகின் பல நாடுகளிலும் இவ்வாறான ஒரு சில சம்பவங்கள் இடம்பெறும். அதனை முறையாக கட்டுப்படுத்துவதே சிறந்தது. மாறாக அதனை ஊதி பெரிதுபடுத்துவதில் அர்த்தமில்லை. இங்கிலாந்து போன்ற நாடுகளில் கூட இவ்வாறான கலவரங்கள் நடந்துள்ளன. உண்மையில் பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் விரிசல் உள்ளதா? அவ்வாறு இருப்பதனால் அதற்கான காரணம் என்ன போன்ற விடயங்கள் ஆராயப்படுகிறது. அத்தோடு அதற்கான காரணத்தை கண்டறிந்து அவற்றை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்போம்.
அனேகமான சந்தர்ப்பங்களில் ஒரு சிலரின் முறையற்ற செயற்பாடுகளினால் கலவரமான நிலை தோன்றி விடுவதுண்டு. அதனை ஆராயாமல் அப்படியே அதைத் தொடரும் ஒரு கலாசாரம் இங்குள்ளது இத்தகைய போக்கை மாற்றி யமைக்க வேண்டும். உதாரணமாக ஒரு வாகனத்தில் மோதுண்டு ஒருவர் பலியானால் அந்த வாகனத்தில் சாரதியை அடித்து கொல்வதும் அவ்வாகனத்தை தீக்கிரையாக்குவதுமான சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
உண்மையில் எந்தவொரு சாரதியும் வேண்டுமென்று யார் மீதும் மோதுவதில்லை. அவ்வாறு விபத்துக்கள் தொடர்பாக சட்ட ரீதியான அணுகுமுறைகள் இருக்கின்றன. அதனையே பின்பற்ற வேண்டும். இது போன்ற ஒரு நிலைமையே தற்போது சில பகுதிகளில் பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இருப்பதாகத் தான் கருதுகின்றேன்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply