இலங்கையில் தேர்தல் தின துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி
இலங்கையில் உள்ளூராட்சி சபைகளுக்கான வாக்கெடுப்பு தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை நடந்த வன்செயல்களில் ஆளும் கட்சியின் கட்சியின் முக்கியஸ்தரான பாரத லக்ஷமன் பிரேமச்சந்திர உட்பட குறைந்தபட்சம் மூவர் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிறிலங்கா மஹஜன கட்சியின் தலைவருமான பாரத லக்ஷமன் பிராமச்சந்திர அவர்கள் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் இலங்கை ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வா அவர்களும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
பாரத லக்ஷ்மன் பிராமச்சந்திர அவர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் கணவரான விஜய குமாரதுங்க அவர்களின் நெருங்கிய சகாவாவர். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகராகவும் அவர் செயற்படுகிறார்.
அதேவேளை இந்தச் சம்பவத்தில் காயமடைந்த துமிந்த சில்வா அவர்களும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் நெருங்கிய சகாவாகப் பார்க்கப்படுகிறார். அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகவும், அறுவைச் சிகிச்சை நடந்து முடிந்துள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆளும்கட்சியில் உட்கட்சி மோதல்?
ஆளும் கட்சியின் உட்கட்சி மோதலே இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு காரணம் என்றும் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர தரப்பினருக்கும், துமிந்த சில்வா தரப்பினருக்கும் இடையிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்ததாகவும் கொழும்பில் இருந்து வரும் செய்திகள் கூறும் நிலையில் அது குறித்து, தேசிய பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தின் இயக்குனரான லக்ஷ்மன் ஹுலுகல்ல அவர்களிடம் பிபிசி சார்பில் கேட்கப்பட்டபோது, இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் புலன் விசாரணைகளை நடத்தி வருவதாகவும், தற்போதைக்கு அவை குறித்து எதுவும் கூற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை , இந்த முல்லேரியாச் சம்பவத்தில் காயமடைந்த 5 பேர் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதாக அந்த மருத்துவமனையின் விபத்துப் பிரிவின் இயக்குனரான டாக்டர் பிரதீப் ஆரியவன்ஸ தெரிவித்துள்ளார்.
ஒருவர் உயிரிழந்து விட்டார் என்றும் இருவருக்கு அறுவைச் சிகிச்சை நடக்கவிருக்கிறது என்றும்அதன் பின்னரே அவர்களது நிலைமை குறித்துக் கூற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
அதேவேளை, பாரத லக்ஷமன் பிரேமசந்திர அவர்களது சடலம் கொழும்பு பொலிஸ் பிரேதக் கிடங்கில் வைக்கப்பட்டிருப்பதாக செய்தியாளர் கூறியுள்ளார். அந்த இடத்தில் மிகுந்த பதற்றம் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்த வன்முறைகளில் சில வாகனங்கள் எரிக்கப்பட்டதை சில ஊடகங்கள் காண்பித்துள்ளன.
பதற்றமான சூழலையடுத்து சம்பவம் நடந்த முல்லேரியா பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் ஞாயிறு காலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply