முல்லேரியா சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வு பொலிசார் விசாரணை
முல்லேரியா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருவதாகவும் அப்பகுதியில் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதுடன் பதற்றமற்ற சுமுகமான நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் மெக்ஷி புரொக்டர் தெரிவித்தார். நேற்று முன்தினம் பிற்பகல் குறித்த பகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரு குழுக்களிடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரதலக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட மூவர் பலியானதுடன் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா அடங்கலாக பத்துப் பேர் படுகாயமடைந்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் நேற்று காலை ஆறு மணியுடன் நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முல்லேரியா பகுதியில் வாக்குச் சாவடியொன்றின் அருகாமையில் நேற்று முன்தினம் மாலை நான்கு மணியளவில் அரச தரப்பு அரசியல் வாதிகளின் ஆதரவாளர்கள் இருவரிடையே இடம்பெற்ற மோதல் சம்பவமொன்று உச்ச நிலையை அடையவே அது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் வரை சென்றுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவும் அவருடைய மெய்ப் பாதுகாவலர்கள் இருவரும் கொல்லப்பட்டதுடன் அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வாவும் அவருடய ஆதரவாளர்கள் பத்துப் பேரும் படுகாயமடைந்துள்ளனர்.
தலையில் படுகாயமடைந்துள்ள துமிந்த சில்வா ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதுடன் அவர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் தலைப் பகுதியிலிருந்து இரண்டு துப்பாக்கி ரவைகள் நீக்கப்பட்டு அவர் ஆபத்தான நிலையைத் தாண்டியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
குறித்த சம்பவத்தினால் முல்லேரியா பகுதியில் மிகுந்த பதற்றமான நிலையேற்பட்டதுடன் அப்பகுதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. நேற்று முன்தினம் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நேற்று காலையுடன் நீக்கப்பட்டதுடன் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இச்சந்தர்ப்பத்தில் எவ்வாறு குழப்பம் ஏற்பட்டது. யார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார்கள் அதன் பின்னணி என்ன? போன்ற தடயங்களை ஆராய்வதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply