பாரத லக்ஸ்மன் கொலை முதலில் சுட்டவர் யார்?
கொலன்னாவ, முல்லேரியாவில் நேற்றுமுன்தினம் இடம் பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஜனாதிபதியின் ஆலாசகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஸ்;மன் பிரேமச்சந்திர கொல்லப்பட்டமை குறித்தான விசாரணைகளை மேற்கொள்ளும் இரகசியப் பொலிஸார் இது தொடர்பான முக்கிய தகவல்களைத் திரட்டியிருக்கின்றனர் என்று தெரியவருகிறது.
தேர்தலின்போது ஆளுங்கட்சி ஆதரவாளர் ஒருவர் துமிந்த சில்வாவின் சகாக்களால் தாக்கப்பட்ட சம்பவமே இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திற்கு வழிகோலியுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பிலான கருத்து முரண்பாடு நேற்றுமுன்தினம் தீவிரமடைந்திருந்த சமயத்தில் இரு தரப்பினரும் நேருக்கு நேர் சந்திக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. முதலில் இரு தரப்பினரும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட போதிலும் இடையில் திடீரென துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தொடர்ந்து ஜயவர்தனபுர வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைபெற்று வருகின்றார். துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றவுடன் ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட துமிந்த சில்வாவிற்கு இரண்டு மணி நேர சத்திரசிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்போது தலையிலிருந்து இரண்டு ரவைகள் அகற்றப்பட்டன.
அதேசமயம், அவசர சிகிச்சைப்பிரிவில் இருக்கும் துமிந்த சில்வாவின் உடல் நிலைமை குறித்து இன்னும் 24 மணி நேரத்தில் மருத்துவர்கள் அறிக்கை வெளியிடுவார்கள் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில் இந்தச் சம்பவம் குறித்தான விசாரணைகளை நடத்தும் இரகசியப் பொலிஸார் முதலில் துப்பாக்கியால் சுட்டவர் யார் என்பதைக் கண்டறிவதில் தீவிரமாக உள்ளனர். இது தொடர்பில் அவர்களுக்கு முக்கியமான தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் நம்பகமாகத் தெரியவருகிறது.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டதையடுத்து ஆத்திரமடைந்துள்ள அவரது ஆதரவாளர்கள், சிறிஜயவர்தனபுர வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவின் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் கரணமாக அவரைப் பாதுகாக்கும் பொருட்டு துமிந்த சில்வாவின் ஆதரவாளர்கள் ஜயவர்தனபுர வைத்தியசாலையைச் சுற்றிவளைத்துப் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply