பிரதமரின் அறிவிப்பு மழுப்பலானது : ஜெயலலிதா

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என இந்தியப் பிரதமர் விடுத்துள்ள அறிவிப்பை விமர்சித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியப் பிரதமரின் அறிவிப்பில் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை, அவற்றுக்காக இலங்கை அரசை இந்தியா கண்டிக்கவும் இல்லை என ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் அறிவிப்பு “மழுப்பலான, பயனில்லாத பதில்” என்று ஜெயலலிதா விமர்சித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில்,

“இலங்கை தமிழர் விவகாரத்தில் திமுக மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதாக கருணாநிதி அரங்கேற்றும் நாடகத்துக்கு துணைபோகும் வகையில் பிரதமர் இந்த தெளிவற்ற அறிவிப்பைச் செய்துள்ளார் என ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இனப்படுகொலைகளை நிகழ்த்தியவர்களைப் போர் குற்றவாளிகள் என பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்று பேரவையில் 08.06.2011 அன்று என்னால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசு அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாகவே இருந்து வந்தது. இந்தத் தருணத்தில் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு கூட்டத்தில் இலங்கை அரசைக் கண்டித்து அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், அந்தத் தீர்மானத்தின் மீது இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவாக செயல்படும் என்று செய்தி வெளியானதும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்து பிரதமருக்கு 29.2.2012 அன்று கடிதம் எழுதினேன்.

அதற்கும் பிரதமரிடமிருந்து பதில் வராத நிலையில், இலங்கை அரசைக் கண்டிக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என்று செய்தி வெளியானதும், மீண்டும் 06.03.2012 அன்று பிரதமருக்குக் கடிதம் எழுதி, தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

இந்நிலையில், மக்களவையில் பிரதமர், ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் எனத் தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவம் மனித உரிமைகளை மீறியது குறித்து எதையுமே அவர் குறிப்பிடவில்லை. இது ஒரு மழுப்பலான, பயனில்லாத பதில்.

திமுக தலைவர் 2009இல் உண்ணாவிரதம் இருந்தபோது, அந்த நாடகத்தில் ஒரு பாத்திரமாக சிதம்பரம் இருந்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். தற்போது பிரதமரே அந்த நாடகத்திற்குத் துணைபோகும் வகையில் தெளிவற்ற ஒரு பதிலை கூறியிருப்பது வருத்தத்திற்குரியது” என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply