அரசாங்கத்துக்கு ஏழரைச்சனி ஆரம்பம் : ஐ.தே.க.
ஜெனீவாவில் இலங்கை எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு அமைச்சர்களின் கோமாளித்தனமான நடவடிக்கைகள் நன்மைகளைப் பெற்றுக் கொடுக்காது. எனவே அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் செயற்பட்டு சர்வதேசத்தில் காணப்படும் இலங்கைக்கு எதிரான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. 1988 மற்றும் 89 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசு தனக்கு எதிராக ஐ.நா. வால் முன் வைக்கப்பட்ட மனித உரிமை பிரச்சினைகளுக்கு இராஜதந்திர ரீதியில் முகம் கொடுத்து நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தாத வகையில் நிர்வகித்தது.
அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும். அத்துடன் நாடு எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐ.தே.க.வின் பாராளுமன்றக் குழு கூடி ஆராயவுள்ளது என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய ஐ.தே.க.வின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக கூறுகையில்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் 7வது ஆண்டை பூர்த்தி செய்கையில் நாட்டிற்கு ஏழரைச் சனியன் பிடித்துள்ளது. வாக்குறுதிகளும் உறுதி மொழிகளும் காற்றோடு போலியாகி நாட்டில் ஊழல் மோசடி, போதைப் பொருள் மற்றும் விபசாரம் வறுமையென பல்வேறு சமூக சீரழிவுகள் மேலோங்கியுள்ளது. பொலிஸ் திணைக்களம் மற்றும் சட்ட ஒழுங்குகள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய நூதன சாலையைக் கூட பாதுகாக்க முடியாத நிலையிலேயே அரசின் மக்கள் சேவை காணப்படுகின்றது. சர்வதேச நாடுகளின் தலையீடுகள் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. இதற்கு அரசாங்கத்தின் தவறான இராஜதந்திர அணுகு முறைகளே காரணமாகும்.
எவ்வாறாயினும் ஐ.தே.க அந்நிய நாடுகளின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்காது. ஆனால் இதற்கான சூழலை ஏற்படுத்தும் அரசாங்கத்தையும் ஏற்றுக்கொள்ளமுடியாது. நிபுணர் குழுவின் அறிக்கையை கண்டித்து அமைச்சர்கள் கோமாளித்தனமாக உள்நாட்டில் உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தினர். எந்தளவிற்கு சாத்தியப்பட்டது என்று அனைவருக்கும் தெரியும்.
எனவே நல்லிணக்க ஆணைக்குழுவில் காணப்படும் பரிந்துரைகளில் பொதுவான விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும், வீண் பிரச்சினைகளை வளர்த்து நாட்டை மீண்டும் ஆபத்தில் தள்ளிவிடக் கூடாது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply