டில்லி வரும் பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி பிரதமர் மன்மோகனுடன் பேச்சுவார்த்தை

பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி, ஒரு நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.சர்தாரியுடன் அவருடைய மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நியமன தலைவருமான 23 வயது பிலாவல் புட்டோ சர்தாரி, குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் மற்றும் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் உள்ளிட்ட உயர்மட்ட குழுவினர் டில்லி வருகிறார்கள்.
இன்று காலை 11 மணி அளவில், டில்லி விமான நிலையத்தில் வந்து இறங்கும் சர்தாரி, ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் மன்மோகன்சிங் இல்லத்திற்கு செல்கிறார்.
அங்கு பிரதமர் மன்மோகன்சிங்கும், பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரியும் தனியாக சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இந்த பேச்சுவார்த்தைக்குப்பின் சர்தாரிக்கு மன்மோகன்சிங் மதிய விருந்து கொடுக்கிறார். பேச்சுவார்த்தையின்போது இரு தரப்பு உறவு மற்றும் பிராந்திய பிரச்சினைகள் இடம்பெறும் என்று, வெளியுறவுத் துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.
பிரதமர் மன்மோகன்சிங் அளிக்கும் விருந்து நிகழ்ச்சி முடிந்ததும், பிற்பகல் 2 மணிக்குப்பின் சர்தாரி மற்றும் குழுவினர் தனி விமானத்தில் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு புறப்பட்டு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கிருந்து அவர்கள் 4 ஹெலிகாப்டர்கள் மூலம் பிரசித்தி பெற்ற அஜ்மீர் தர்காவுக்கு சென்று பிரார்த்தனை நடத்துகிறார்கள்.
அஜ்மீர் தர்காவில் பிரார்த்தனையை முடித்துக் கொண்டு, ஜனாதிபதி சர்தாரி ஜெய்ப்பூர் வழியாக பாகிஸ்தான் திரும்புகிறார். சர்தாரியின் வருகையையொட்டி டில்லி, ஜெய்ப்பூர் மற்றும் அஜ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
“அஜ்மீர் தர்காவில் பிரார்த்தனை நடத்துவதற்கான வேண்டுகோள்தான் சர்தாரியிடம் இருந்து வந்திருந்தது. இந்த வருகையின்போது மதிய விருந்துக்கு பிரதமர் மன்மோகன்சிங் விடுத்த அழைப்பை சர்தாரி ஏற்றுக் கொண்டார். பாகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதி ஒருவர், 7 ஆண்டுகளுக்குப்பின் தற்போது டில்லி வருவது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply