காந்தியின் சிலை உடைப்புக்கு இந்தியா கடும் கண்டனம்
மட்டக்களப்பில் மகாத்மா காந்தி சிலை உடைக்கப்பட்டதற்கு இலங்கை அரசிடம் இந்தியா, கடும் கண்டனத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இந்தியத் தூதரகப் பேச்சாளர் ஒருவர் இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் இந்தியாவின் எதிர்ப்புக் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து உரிய அதிகாரிகளை விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொள்ளும்படியும் இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் இந்தியா கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் உடைக்கப்பட்ட மகாத்மா காந்தி சிலையை மீளமைப்பதற்கு உதவவும் இந்தியா முன்வந்துள்ளது.
இதேவேளை மகாத்மா காந்தி சிலை உடைப்புச் சம்பவம் தொடர்பாக இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா நேற்று முன்தினம் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாரத்ன அமுனுகமவை சந்தித்து இந்தியாவின் கவலையையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளதாக இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து உடனடி விசாரணைகளை நடத்துமாறும் அவர் கேட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் கண்டனத்தை அடுத்தே இலங்கை வெளிவிவகார அமைச்சு நேற்று முன்தினம் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
காந்தி சிலை உடைப்புச் சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்தி இதன் பின்னணியில் உள்ள குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க இலங்கை பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேவேளை, சேதமாக்கப்பட்ட சிலையைத் திருத்துவதற்காக கட்டிடக் கலைஞர்களின் குழுவொன்றை மட்டக்களப்புக்கு அனுப்பியுள்ளது.
இதுபற்றி விசாரிக்க இரண்டு பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள போதும் எவரும் கைது செய்யப்படவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply