‘யாழ். ஆலய வாகனங்கள் சேதமாக்கப்பட்டன’
இலங்கையின் வடக்கே யாழ் மாவட்டத்தின் இந்து ஆலயங்களில் உள்ள தெய்வ விக்கிரகங்களின் வாகனங்களாக விளங்குகின்ற மரத்திலான உருவங்களின் தலைகள் சில அடையாளம் தெரியாதவர்களினால் அறுத்துச் செல்லப்பட்டிருப்பதாக ஆலய நிர்வாகிகள் தெரிவித்திருக்கின்றனர்.
கோப்பாய் பிரான்பற்று பிரதேச பிள்ளையார் கோவில் மற்றும் அச்செழு பகுதியில் உள்ள ஆலயம் ஆகியவற்றிலேயே இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்து மக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் இத்தகைய செயல்கள் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து கருத்து வெளியிட்ட, யாழ்ப்பாணம் துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவரும் ஆன்மீகத் தலைவருமாகிய ஆறு திருமுருகன், பழைமை வாங்ந்த ஆலயங்களின் சுவாமி உருவச் சிலைகள், ஆலயத் தேர்ச்சிற்பங்கள், மற்றும் ஆன்மீகப் பெறுமதி மிக்க பொருட்களும் அண்மைக்காலமாக கொள்ளையடிக்கப்படும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.
”மனிதன் சிறப்பான முறையில் வாழ்வதற்கு உறுதுணையாக இருப்பது ஆன்மீகம். இந்த ஆன்மீகச் சின்னங்கள் கொள்ளையடிக்கப்படுவதும் கொச்சைப்படுத்தப்படுவதும் சமூகத்திற்கு நல்லதல்ல. இந்தச் சம்பவங்களினால் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்துக்கள் பெரும் கவலைக்கும் துயரத்திற்கும் உள்ளாகியிருக்கின்றார்கள். ஆன்மீகத்திற்கு விரோதமான இத்தகைய சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுத்து நிறுத்த வேண்டியதும், கோவில்களின் பெறுமதிமிக்க சிலைகள், சின்னங்களைப் பாதுகாக்க வேண்டியதும், அனைவரினதும் பொறுப்பாகும்” என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே இந்தச் சம்பவங்கள் குறித்து இலங்கை பொலிஸ் தரப்பு பேச்சாளரை கேட்டபோது, இப்படியான சம்பவங்கள் எதுவும் குறித்து தமக்கு முறைப்பாடு எதுவும் அண்மையில் வரவில்லை என்று கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply