13வது திருத்தச் சட்டத்தை ரத்து செய்யவும்: ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைப்பு

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக அதிகாரப் பகிர்வை வலியுறுத்தும் வகையில் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தினை அடுத்து கொண்டுவரப்பட்ட 13 வது திருத்தச் சட்டத்தினை இலங்கை அரசாங்கம் ரத்துச் செய்ய வேண்டும் என்று இலங்கையின் தொழில்சார் நிபுணர்களின் சங்கங்களின் கூட்டமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

13 வது திருத்தச் சட்டம் இலங்கை நாடாளுமன்றத்திற்கோ அல்லது இலங்கை மக்களுக்கோ தெரியாமல் இந்தியாவினால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறி அதனை நீக்க வேண்டும் என்று இலங்கையின் தொழில்சார் நிபுணர்களின் அமைப்புக்களின் கூட்டமைப்பின் தலைவர் திலின கிரிங்கொட கூறியுள்ளார்.

13 வது திருத்தச் சட்டம் இலங்கை மீது திணிக்கப்பட்ட ஒன்று என்றும் அது இலங்கையில் பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது என்றும் பெருமளவு பண விரையத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், நாட்டில் ஒரு அரசியல் ஸ்திரமின்மையை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை இலங்கையில் 13 வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரப்பகிர்வானது இன ரீதியிலான அதிகாரப் பகிர்வு என்றும், ஒன்றுபட்ட இலங்கைக்கு அது பாதகமானது எனவும் அவர் கூறினார்.

13 வது திருத்தச் சட்டத்தை விடுதலைப்புலிகள் ஆதரித்தார்கள் என்றும் அதனால் அதனை ஜனாதிபதி ரத்துச் செய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply