சம்பூர் மக்களுக்கான உதவிகள் நிறுத்தப்பட்டத ஏன்? உலக உணவு திட்டம் விளக்கம்
இலங்கையில் அனல்மின் நிலையம் அமையவுள்ள சம்பூர் பிரதேசத்தை சேர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்காக அரசு மாற்றிடங்களை வழங்க முன்வந்த காரணத்தால்தான் 7 மாதங்களுக்கு முன்னர் அவர்களுக்கான உணவு உதவிகள் நிறுத்தப்பட்டதாக உலக உணவு திட்டம் கூறுகிறது.
எந்தவிதமான அழுத்தங்களினாலும் தமது நடவடிக்கைஅமையவில்லை என்றும் தம்மிடமுள்ள வளங்கள் மற்றும் மக்களுக்கான தேவைகள் பற்றி ஆராய்ந்து எங்குள்ள மக்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று தீர்மானிக்கப்படுவதாகவும் பிபிசி தமிழோசையிடம் உலக உணவு திட்டத்தின் இலங்கைக்கான பதில் இயக்குநர் மைக் சேக்கட் கூறினார்.
அதன்படி வட- மாகாணத்தில் இருக்கின்ற மூன்றரை லட்சம் மக்களுக்குத்தான் முன்னுரிமை அடிப்படையில் உணவு வழங்கிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தமது நிறுவனம் சம்பூர் மக்களுக்கு 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையான 5 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக உணவு உதவிகளை வழங்கிவந்ததாகவும் அவர்களுக்கான மாற்றிடங்களை வழங்க அரசு முன்வந்த சூழ்நிலையில் அவர்கள் தம்மைத் தாமே பராமரித்துக்கொள்ள முடியும் என்ற அடிப்படையில் உதவிகளை நிறுத்தியதாகவும் மைக் சேக்கட் தெரிவித்தார்.
தமது சொந்தக் குடிமக்களை மீளக்குடியமர்த்தி அவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கான பொறுப்பை அரச முன்னெடுக்க முன்வருகின்ற போது அங்கு தமது உதவிகளுக்கு தேவை ஏற்பட வாய்ப்பில்லை என்றும் உலக உணவுத் திட்டத்தின் பதில் இயக்குநர் கூறினார்.
பெரும் நிதிநெருக்கடியில் இருக்கின்ற உலக உணவுத் திட்டம் ஆண்டுக்கு ஒருமுறை வடக்கு கிழக்கு பிரதேசங்களில் நடத்தும் மதிப்பீட்டின்படி வடக்கில்தான் தமது உதவிகள் தொடரும் என்றும் உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பதில் இயக்குநர் மைக் சேக்கட் கூறினார்.
சம்பூர் மக்கள்
கிளிவெட்டி, பட்டித்திடல், மணற்சேனை, கட்டைப்பறிச்சான் ஆகிய இடங்களில் நீண்டகாலமாக தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள இந்த மக்கள் தம்மை தமது சொந்த இடங்களில்தான் குடியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
அரசு காட்டுகின்ற மாற்றிடங்களில் சென்று குடியேற மறுப்பதால் தமக்கு கடந்த 7 மாதங்களுக்கும் அதிகமான காலம் உணவு உதவிகள் மறுக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் அங்குள்ள மக்கள் பெரும் சிரமங்களை அனுபவித்துவருவதாகவும் மூதூர் பிரதேசசபை உறுப்பினர் ராமலிங்கம் நாகேஸ்வரன் பிபிசி தமிழோசையிடம் சுட்டிக்காட்டியிருந்தார்.
மாற்றிடங்களில் குடியேறுகின்ற பட்சத்தில் இந்த மக்களுக்கான உணவு உதவிகள் கிடைக்கும் என்று உள்ளூர் அரச அதிகாரிகள் கூறுவதாகவும் சம்பூர் மக்கள் கூறினார்கள்.
இதேவேளை, சம்பூரில் சுமார் 800 ஏக்கருக்கும் அதிகமான காணிப்பகுதியை அரசவேலைகளுக்காக எடுத்துக்கொள்வதாக அரசாங்கம் அண்மையில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தமது வாழ்விடங்களும் பறிபோவதாக தாம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதாகவும் மூதூர் பிரதேசசபை உறுப்பினர் நாகேஸ்வரன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply