ஆளும் கட்சி அரசியல்வாதிகளினால் பொலிஸாருக்கு அழுத்தம்!
அடுத்த மாதம் நடைபெறவுள்ள மூன்று மாகாணசபை தேர்தல்களுக்கான பிரச்சார நடவடிக்கைகளில் ஆளும் கட்சி அரசியல்வாதிகளினால் பொலிஸ் அதிகாரிகள் பாரிய அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கின்றனர் என சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (பவ்ரல்) அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளில் கடமையில் ஈடுபட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், அரசியல் தலையீடின்றி தமது கடமையை செய்ய அனுமதிக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் அவ் அமைப்பு பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனிடம் கோரியுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் ஆளுங்கட்சியான ஐ.ம.சு. கூட்டமைப்பின் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் ஒன்றிலிருந்து தேர்தல் பிரச்சார ஸ்டிக்கர் ஒன்றை அகற்றிய இரத்தினபுரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை ஆளும் கட்சி சிரேஷ்ட அரசியல்வாதியொருவர் அச்சுறுத்தியதாக, குறிப்பிட்டுள்ள ‘பவ்ரல்’ அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் றோஹன ஹெட்டியாராச்சி, குறித்த இந்தச் சம்பவத்தை பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் சரியான முறையில் செயற்படாமை குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. ஆயினும் தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயாராக உள்ள சில பொலிஸ் அதிகாரிகளும் உள்ளனர். இவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்’ என ஹெட்டியாராச்சி சுட்டிக் காட்டியுள்ளார்.
அதேவேளை சப்ரகமுவ மாகாண சுகாதார அமைச்சு ஊழியர்களை அழைத்து பேசிய முன்னாள் சப்ரகமுவ முதலமைச்சர் மஹிபால ஹேரத்துக்கு எதிராக ‘நெம்’ எனும் தேர்தல் காண்காணிப்பு அமைப்பு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் முறைப்பாடு செய்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply