இலங்கையில் நிலவிய புயல் அச்சம் நீங்கியது

வங்காள விரிகுடாவில் நிலவிய தாழமுக்கம் காரணமாக இலங்கையில் ஏற்பட்டிருந்த புயல் அச்சம் நீங்கியுள்ளது.  இந்தப் புயல் தமிழகத்தை நோக்கி திரும்பியிருப்பதனால், இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களை புயல் தாக்கலாம் என விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கை நீக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை காலை அறிவித்திருந்தது. எனினும் வடபகுதியிலும் நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.

வடக்கில் அடை மழை தொடர்வதனால் தாழ்ந்த நிலப்பகுதிகள் வெள்ளத்தால் மூடப்பட்டிருக்கின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றக் கிராமங்கள் பலவற்றில் குடிசைகளுக்குள் வெள்ளம் புகுந்ததனாலும் காற்றினால் கூரைகள் பறந்து, கூரைவிரிப்புகள் அள்ளுண்டு செல்லப்பட்டதனாலும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து அருகில் உள்ள பாடசாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளன.

இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு சமைத்த உணவு வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூரை விரிப்புகள், தரை விரிப்புகள் தேவையான குடும்பங்களுக்கு அவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கில் தொடர் அடைமழையினால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

அம்பலவன் பொக்கணை கடலிலும் நந்திக்கடலிலும் நீர் மட்டம் உயர்வடைந்ததையடுத்து அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் பாதுகாப்புக்காக புதுக்குடியிருப்பை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர்.

சீனியாமோட்டையில் குடியேற்றப்பட்டிருந்த கேப்பாப்பிலவு பகுதி மக்களுடைய குடிசைகளுக்குள்ளே மழை நீர் புகுந்ததனால், அவர்களும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனந்தபுரம் பகுதியில் வீடொன்றிற்குள் மழைநீர் உட்புகுந்ததையடுத்து, வீட்டு உரிமையாளர் முற்றத்தில் மண்ணை அணைத்து நீர் உட்புக முடியாமல் தடுக்க முயற்சித்த போது, மண்வெட்டியில் சிக்கிய வெடிக்காத நிலையிலிருந்த குண்டொன்றை கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் தூரத்தில் வைத்து வெடிக்க வைத்துள்ளனர்.

அந்தப் பகுதியில் வீடுகளில் இருந்தவர்கள் அனைவரும் தொலைவில் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதன் பின்னரே, மிகவும் சக்தி வாய்ந்த அந்தக் குண்டு வெடிக்க வைக்கப்பட்டது. அப்போது, அது மிகவும் பெரிய சத்தத்துடன் வெடித்ததாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.

அடை மழை காரணமாக நேற்று வன்னிப் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வருகை மிகவும் குறைந்திருந்ததாகக் கல்வித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

போக்குவரத்து சேவைகளில் ஏற்பட்டிருந்த தாமதம், அசௌகரியங்கள் காரணமாக அரச தனியார் அலுவலகங்களிலும் ஊழியர்களின் வருகை குறைந்துகாணப்பட்டன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply