கண்டனத் தீர்மானத்திற்கு எதிரான வழக்கு மீதான விசாரணை இன்று
இலங்கையில் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கும் முயற்சியில் கொண்டுவரப்பட்டுள்ள கண்டனத் தீர்மானத்தை தொடர்ந்தும் முன்னெடுக்காதபடி ரத்துசெய்யும் தடையுத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பைச் சேர்ந்த சந்திரா ஜயரத்ன என்ற கணக்காளர் இந்த வழக்கைத் தாக்கல்செய்துள்ளார்.
தலைமை நீதியரசரை பதவி நீக்கம் செய்யும் கண்டனத் தீர்மானத்தை விசாரிக்கவுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் 11 உறுப்பினர்களும் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜா முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை இந்த வழக்கு அழைக்கப்பட்டபோது, இந்த வழக்கில் சட்ட நுணுக்கங்கள் சம்பந்தப்பட்ட பல விடயங்கள் ஆராயப்பட வேண்டியிருப்பதால் மூவரடங்கிய நீதிபதிகள் குழுவே இன்று செவ்வாய்க்கிமை வழக்கை விசாரிக்கவுள்ளதாக அவர் கூறினார்.
தலைமை நீதியரசருக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தை ஆராயவுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு அந்த விசாரணையில் ஈடுபடுவதற்கான அதிகாரம் இல்லையென மனுதாரர் தரப்பு சுட்டிக்காட்டுகிறது.
தலைமை நீதியரசர் விடயத்தில் இந்த நாடாளுமன்றக் குழு மூலம் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை என்றும், தலைமை நீதியரசருக்கு போதுமான காலஅவகாசம் கிடைக்குமா என்பதே சந்தேகம் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, தலைமை நீதியரசருக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தை விசாரிக்க அனுமதிக்காமல் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தடை விதிக்குமாறு நீதிமன்றத்திடம் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply