இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் திடீர் வீழ்ச்சி

இலங்கையின் ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி குறித்து, ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இலங்கை வர்த்தக சம்மேளனம் இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டுமே இந்த ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி நான்கு சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பல பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இந்த ஆயத்த ஆடைகளின் வர்த்தகம் இருக்கும் நிலையில், இந்த ஏற்றுமதி வீழ்ச்சி அந்தத் தொழிலை பெரிதும் பாதிக்கும் என்றும் ஏற்றுமதியாளர்கள் கூறுகிறார்கள். பல நாடுகளில் ஆயத்த ஆடை தொழிலில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடைபெற்ற இறுதிப் போரில் கடும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகவும், அதற்கு சரியான பொறுப்புக் கூறல் ஏற்படும் வரை ஐரோப்பிய ஒன்றியம் அளித்துவந்த ஜிஎஸ்பி10 வரிச்சலுகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் காரணத்தினாலேயே ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்கு காரணம் என்று அத்துறை சார்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஏற்றுமதியில் எற்பட்ட வீழ்ச்சியே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார், இலங்கை ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரொஹான் அபயகோன்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தமது ஏற்றுமதியில் மட்டும் 12 முதல் 13 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் கூறுகிறார்.

கடந்த ஆண்டில் மாத்திரம் இலங்கையிலிருந்து மொத்தமாக 4.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.  பல நாட்டுச் சந்தைகளில் இலங்கையின் தயாரிப்புகள் விற்கப்படுகின்றன.

இலங்கை அரசு நல்லிணக்க ஆணைக்குழுவின் சில பரிந்துரைகளை செயல்படுத்தத் தொடங்குவதில் முன்னேறி வரும் சூழலில், ஜி எஸ் பி10 வரிச்சலுகையை மீண்டும் பெறும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க சரியான தருணம் வந்துள்ளது எனவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

ஜி எஸ் பி10 வரிச்சலுகையை இலங்கை இழந்த போது இருந்த நிலைமையை விட நாட்டில் இப்போது முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன எனக் கூறும் ரொஹான் அபயகோன், இலங்கை அரசு இப்போது அந்தச் சலுகையை மீண்டும் கோரி விண்ணபிக்கத் தவறினால் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு அதை இழக்க நேரிடும் எனவும் சுட்டிக்காட்டுகிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply