தொழிலாளர் தரப்பு நியாயங்கள் காத்திரமாக முன்வைக்கப்பட வேண்டும்

இலங்கையில் மலையக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள மறு நிர்ணயத்துக்கான காலம் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், தொழிலாளர் தரப்பு நியாயங்கள் தொடர்பில் உரிய தொழிற்சங்கங்கள் ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றை காத்திரமாக முன்வைக்க வேண்டும் என்று மலையக தொழிலாளர்கள் குறித்த ஆய்வாளரும், மூத்த செய்தியாளருமான தேவராஜ் அவர்கள் கூறியுள்ளார்.மலையக தொழிலாளர்களின் சம்பள மறு நிர்ணயத்துக்கான ஒப்பந்தம் இந்த வருடத்தில் மார்ச் மாதத்தில் செய்து கொள்ளப்பட வேண்டும். ஆனால் அது குறித்த ஒப்பந்தம் எதுவும் இதுவரை ஏற்பட்டதாகத் தெரியவில்லை.கடந்த தடவையும் இது குறித்த ஒப்பந்தம் காலம் கடத்தியே மேற்கொள்ளப்பட்டது.இந்த ஒப்பந்தத்தில் முதலாளிமார் சம்மேளனத்துடன் தொழிலாளர் தரப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் தோட்டத் தொழிலாளர் கூட்டமைப்பு ஆகிய சங்கங்கள் மாத்திரமே கையெழுத்திட முடியும்.

ஆனால், ஏனைய தொழிற்சங்கங்கள் இந்த விடயத்தில் தாம் இந்தத் தடவை அழுத்தம் கொடுக்கும் வகையில் செயற்படப் போவதாகத் தெரிவித்துள்ளன.

அதற்காக அவை ஒரு கூட்டமைப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

ஆனால், வழமையாகவே ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாத தொழிற்சங்கங்களின் கோசங்கள் வெகுவாக பயன் எதனையும் தருவதில்லை என்று கூறுகின்ற தேவராஜ் அவர்கள், அதேவேளை, கையழுத்திடும் தொழிற்சங்கங்கள் சரியான வகையில் தொழிலாளர் தரப்பு நியாயங்களை முதலாளிமார் சம்மேளனத்திடம் முன்வைப்பதில்லை என்றும் கூறுகிறார்.

ஒருபுறம் தமது தரப்பு விவாதங்களை முதலாளிமார், புள்ளிவிபரங்களுடன் முன்வைக்கும் நிலையில், தொழிற்சங்கங்களோ உரிய ஆய்வு எதுவும் இன்றி பலவீனமான நிலையில், வெறும் கையுடனேயே பேச்சு வார்த்தைக்கு போகின்றன என்றும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.இதனால் தொழிலாளர் தரப்பில் சரியாக பேரம் பேச முடியாத நிலைமை ஏற்படுவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply