யுத்த வெற்றியின் நான்காவது ஆண்டு நிறைவு வெற்றி விழா

யுத்த வெற்றியின் நான்காவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெற்றி விழா அணிவகுப்பு மற்றும் தேசிய படை வீரர்கள் நினைவு தின நிகழ்வு வைபவங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று கொழும்பில் கோலாகலமாக நடைபெறுகின்றன. யுத்த வெற்றி அணிவகுப்பின் பிரதான வைபவம் இன்று காலை 8.00 மணிக்கு கொழும்பு காலி முகத்திடலிலும், தேசிய படை வீரர்கள் நினைவு தின பிரதான வைபவம் இன்று மாலை 4.00 மணிக்கு பாராளுமன்ற முன்றலில் அமைக்கப்பட்டுள்ள படை வீரர் நினைவு தூபிக்கு அருகிலும் இடம்பெறவுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதமர் டி.எம். ஜயரட்ன, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம, பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன், சிவில் பாதுகாப்புப் படை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதுதவிர அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள், தூதரக பாதுகாப்பு அதிகாரிகள், மதத்தலைவர்கள், அரச மற்றும் பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

காலி முகத்திடலில் நடைபெறவுள்ள வெற்றி அணிவகுப்பு வைபவத்தில் இம்முறையும் இராணுவம்இ கடற்படை, விமானப் படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படை வீரர்கள் என்ற அடிப்படையில் 13645 வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இவற்றில் 945 அதிகாரிகளும் 12700 வீரர்களும் அடங்குவர்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் எல்.பி.ஆர். மார்க் தலைமையில் நடைபெறவுள்ள இந்த வெற்றி அணிவகுப்பில் வடக்கு, கிழக்கு மற்றும் வன்னி படையணியினர் பங்கு கொள்ளவுள்ளனர்.

அத்துடன் மனிதாபிமான நடவடிக்கையின் போது களமுனையில் பயன்படுத்தப்பட்ட சகல கனரக ஆயுத தாங்கி வாகனங்கள், கவச வாகனங்கள், சமிக்ஞை கருவிகள் போன்ற இராணுவத்தின் 100 வாகனங்களும், யுத்தக் கப்பல்கள், தாக்குதல் கப்பல்கள், அதிவேக டோரா படகுகள் போன்ற கடற்படைக்குச் சொந்தமான 55 கப்பல்களும் 28 தாக்குதல் விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களும் காலி முகத்திடல் கடல் மற்றும் வான் பரப்பில் சாகசங்களை காண்பிக்கவுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வருகையைத் தொடர்ந்து பிரதான வைபவம் இன்று காலை ஆரம்பமாகவுள்ளது.

முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபரினால் பிரதான மேடைக்கு அழைத்துச் செல்லப்படும் ஜனாதிபதி அவர்கள் மங்கள வாத்தியங்களின் முழக்கத்திற்கு மத்தியில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து வெற்றி விழா அணிவகுப்பை வைபவரீதியாக ஆரம்பித்து வைப்பார்.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கு இராணுவ மரியாதை வழங்கும் வகையில் இலங்கை இராணுவத்தின் பீரங்கி படைப்பிரிவினரால் 21 மரியாதை பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்படும். அத்துடன் நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து தாய் நாட்டை மீட்டெடுக்கும் மனிதாபிமான நடவடிக்கையின் போது உயிர்நீத்த படை வீரர்களில் 6 முப்படை வீரர்களுக்கு இராணுவத்தின் உயர் விருதான ‘பரம வீர விபூஷண’ விருது வழங்கப்படவுள்ளது.

உயிர்நீத்த படை வீரர்களின் குடும்ப உறவினர்களிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்த உயர் விருதுகளை வழங்கவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து காலிமுகத்திடலிலிருந்து ஜனாதிபதி அவர்கள் நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்த உள்ளார். தொடர்ந்து வெற்றி விழா அணிவகுப்பு நடைபெறும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply