தென்கொரியாவின் கடல்பகுதியில் வடகொரியா 5வது ஏவுகணை தாக்குதல்

தென்கொரியாவின் கடல்பகுதியில் வடகொரியா மீண்டும் ஏவுகணையை வீசி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மூன்று நாட்களில் வடகொரியா வீசும் 5வது ஏவுகணை இதுவாகும். அணு ஆயுதங்களை தயாரித்து வரும் வடகொரியா மீது ஐ.நா. பொருளாதார தடை விதித்தது. இந்நாட்டுக்கான பொருளா தார வழிகளை அமெரிக்கா மூடி வருகிறது. இதனால் கோபம் அடைந்த வடகொரியா தனது அண்டை நாடும், அமெரிக்காவின் நட்பு நாடாகவும் இருக்கும் தென் கொரியா மீது தாக்குதல் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியது. இதனால் கொரியா பகுதியில் கடும் போர் பதற்றம் ஏற்பட்டது.

தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா தன்னுடைய கடற்படை கப்பலையும், வீரர்களையும் அனுப்பி வைத்தது. மேலும், தென் கொரியாவுடன் இணைந்து கடற்பகுதியில் போர் ஒத்திகையிலும் ஈடுபட்டுள்ளது. இது வடகொரியாவுக்கு மேலும் கோபத்தை வரவழைத்துள்ளது. இதனால் தென் கொரியாவின் கடல்பகுதியில் (ஜப்பான் கடல்) 2 முறை ஏவுகணைகளை வீசியுள்ளது. இந்நிலையில் 3 நாளில் 5வது முறையாக நேற்றும் ஏவுகணையை வீசி வடகொரியா தாக்குதல் நடத்தியது.
இதுகுறித்து தென் கொரிய ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

வடகொரியா ஏவுகணையை வீசியது உண்மைதான்.  ஆனால் இது சோதனை ரீதியான ஏவுகணையா அல்லது வாகனத்தில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டா என்பது உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.

கடந்த சனிக்கிழமை மட்டும் வடக்கு கடற்கரை பகுதியில் வடகொரியா 3 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதுபோன்று சாதாரணமாக வடகொரியா ஏவுகணைகளை வீசுவதில்லை. தற்போது இரு கொரியா நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் வடகொரியாவின் இச்செயல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இவ்வாறு ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply