கச்சதீவை மீட்க கோரி மன்மோகனுக்கு ஜெயலலிதா கடிதம்
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா 21.05.2013 திங்கள்கிழமை ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் ஜெயலலிதா கூறி இருப்பதாவது:- கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீண்டும் இந்தியாவுக்கு மீட்பது தொடர்பாக கடந்த 3-5-2013 அன்று தமிழக சட்டசபையில் கொண்டு வந்து ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். அந்த தீர்மான நகலை இந்த கடிதத்துடன் இணைத்துள்ளேன்.
கச்சத்தீவு தொடர்பாக 26-6-1974 அன்று பிரதமர் இந்திராகாந்திக்கும் இலங்கை பிரதமர் ஸ்ரீமாவோ பண்டார நாயகாவுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் எந்த சட்டத்திருத்தமும் செய்யப்படவில்லை.
பாராளுமன்ற இரு சபைகளிலும் ஒப்புதலும் பெறவில்லை. தமிழக அரசின் நிலைப்பாடு இதில் என்னவென்றால் கச்சத்தீவு எப்போதுமே இந்தியாவுக்கு சொந்தமானது. பூகோள அமைப்புப்படி, கலாச்சாரப்படி வரலாற்று ரீதியாக பார்த்தால் கச்சத்தீவை இந்தியாவுக்கு மீட்க வேண்டியது அவசியமாகும்.
பல்லாயிரக்கணக்கான இந்திய மீனவர்களின் நலனையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும். தமிழக மீனவர்களை சிங்கள ராணுவ வீரர்கள் தொடர்ந்து துப்பாக்கியால் சுடுவதும், தாக்குவதும், துன்புறுத்துவதுமாக இருப்பதால் கடந்த 2008-ம் ஆண்டு உயர் நீதிமன்றில் தனிப்பட்ட முறையில் நான் வழக்கு தொடர்ந்தேன்.
பாராளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று நான் என் மனுவில் வலியுறுத்தியுள்ளேன். அந்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்றில் நிலுவையில் உள்ளது.
2011-ம் ஆண்டு தமிழ்நாட்டில் எனது தலைமையிலான அரசு பதவி ஏற்றதும் 3-6-2011ல் சட்டசபையில் மீண்டும் ஒரு தீர்மானம் கொண்டு வந்தோம். அதன்படி 2008-ல் உயர் நீதிமன்றில் நான் தொடர்ந்த வழக்குடன் தமிழக அரசின் வருவாய் துறையும் இணைந்துள்ளது.
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வதால், தமிழக மீனவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக சட்டசபையில் 3-5-2013 அன்று ஒரு தீர்மானம் கொண்டு வந்து ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானத்தில், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் கொடூரத் தாக்குதல்களும், துன்புறுத்தல்களும், சிறை பிடிக்கும் நிகழ்வுகளும் தொடர்வதைக் கருத்தில் கொண்டும், பெருபாரி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது சட்டப்படி செல்லத்தக்கது அல்ல என்பதாலும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களுக்கு ஏற் படும் வாழ்வாதார பாதிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை நாட்டிற்கு ஒப்படைக்கப்பட்ட கச்சத்தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை தனது ஆளுகையின் கீழ் கொண்டுவர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியப் பேரரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது.
எனவே கச்சத்தீவையும் அதை சுற்றியுள்ள பகுதிகளையும் மீட்க உடனே நடவடிக்கை எடுக்கும்படி உங்களை கேட்டுக் கொள்கிறேன். மேலும் கச்சத்தீவு மீட்கப்பட்டதும் இந்திய கடல் சார் எல்லையை மறுவரையறை செய்தல் வேண்டும். அப்படி செய்தால்தான் தமிழ்நாட்டு மீனவர்கள் தாங்கள் பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதிகளில் அச்சமின்றி பாதுகாப்புடன் மீன்பிடித்து, தங்களது வாழ்வாதாரத்தை உறுதிபடுத்த முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply