பிலிப்பைன்சில் புயல் தாக்கி 100 பேர் பலி: 10 லட்சம் பேர் தவிப்பு
பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல் தாக்கியதில் 100 பேர் பலியானார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்தியில் சமர் தீவு உள்ளது. அதன் அருகே கடலில் ‘ஹையான்’ என்ற பயங்கர புயல் உருவாகியது. இப்புயல் நேற்று அதிகாலை 5 மணியளவில் சமர் தீவில் கரையை கடந்தது.அப்போது மணிக்கு 315 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசி தாக்குதல் நடத்தியது. அதில் வீடுகளின் கூரைகள் பறந்தன. கடலில் ராட்சத அலைகள் உருவாகி கரையோரம் இருந்த வீடுகளை தாக்கி அழித்தது.
பலத்த மழை கொட்டியது. ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்தன. மின்சாரம் மற்றும் தகவல் தொலை தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டன. பல இடங்களில் மின்சார கம்பங்கள் முறிந்தன. இதனால் மின்சாரம் இல்லாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்த புயல் தாக்குதலில் தக்லோபான் நகரம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. பலத்த மழை காரணமாக நகரம் முழுவதும் வெள்ளத்தால் மூழ்கி கிடக்கிறது. விமான நிலையம் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.
இதனால் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ராணுவ விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. அதன் மூலமே மீட்பு படையினர் வர முடிந்தது. உதவி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஹையான் புயல் தாக்கியதில் லெயத் தீவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. பிலிப்பைன்சின் 2–வது பெரிய நகரமான சிபு இங்கு தான் உள்ளது. 25 லட்சம் மக்கள் வாழும் இந்த நகருக்குள் ஆற்று நீர் புகுந்தது. ரோடுகள் சேதமடைந்தன.
புயல் தாக்கியதில் வீடுகள் இடிந்தும், நிலச்சரிவு மற்றும வெள்ளத்தில் சிக்கியும் 100–க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஏராளமான உடல்கள் தெருக்களில் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன.
100 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. ஆஸ்பத்திரிகள் 24 மணி நேரமும் திறந்து வைக்கப்பட்டு டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
‘ஹையான்’ புயல் தாக்கியதில் கான்கிரீட் வீடுகள் மட்டுமே தாக்கு பிடிக்க முடிந்தது. மரம் மற்றும் கூரை, ஓடுகளில் ஆன வீடுகள் காற்றில் பறந்து தரைமட்டமாயின.
ஏற்கனவே, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 12 லட்சம் பேரை அரசு வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளது. இருந்தும் 10 லட்சம் பேர் வீடுகள் இன்றி தவிக்கின்றனர். விளை நிலங்கள் தண்ணீரில் மிதக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply