மன்மோகன் இலங்கை அரசை கவலைப்படுத்தி, தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் :மனோ கணேசன்
இலங்கை பொதுநலவாய மாநாட்டிற்கு, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வருவது தொடர்பில் இலங்கை தமிழ் கட்சிகள் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. தமிழகத்தில் செயற்படுகின்ற தமிழ் கட்சிகள் ஒட்டுமொத்தமாக மன்மோகன் சிங் வருகையை கடுமையாக எதிர்க்கின்றன. இந்நிலையில் கடைசியாக வருகின்ற இந்திய செய்திகளின்படி, இந்திய பிரதமர் இலங்கை வந்து பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளார் என்றே தெரியவருகிறது.இந்திய மத்திய அரசின் இந்த முடிவுக்கு பின்னால் பல காரணங்கள் இருந்தாலும், இன்று இலங்கையில் வாழும் தமிழர்கள் தொடர்பாகவும், தமிழக தமிழர்கள் தொடர்பாகவும் இந்திய பிரதமருக்கு பாரிய கடப்பாடுகள் உள்ளன என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இலங்கையுடனான நட்பை பேணுவதற்காக வரலாறு முழுக்க இந்திய மத்திய அரசு, இலங்கையில் வாழும் தமிழர்களின் நலனை பலியாக்கியுள்ளது. இந்திய மத்திய அரசின் கொள்கை வகுப்பாளர்களின் இந்த நிலைப்பாடுகளினால் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களும், ஈழத்தமிழர்களும் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வரலாறு இனியும் நீடிக்கக்கூடாது. தமிழகத்திலும், இலங்கையிலும் வாழும் தமிழர்கள், இதற்கு இனியும் இடம் கொடுக்க முடியாது. எனவே எந்த காரணத்திற்காக, பிரதமர் இலங்கை வரும் முடிவை எடுத்திருந்தாலும் சரி, அவர் இலங்கை வந்து ஆற்றும் காரியங்கள், வெளியிடும் கருத்துகள், ஆகிய அனைத்தும் இலங்கை அரசுக்கு கடும் செய்திகளை தருகின்றவையாகவும், தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தருகின்றவையாகவும் இருக்க வேண்டும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இலங்கை அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கும் வைபவமாக இந்திய பிரதமரின் வருகை அமைந்திடக்கூடாது.
இலங்கை வந்து மன்மோகன் வெளிப்படுத்தும் நிலைப்பாடுகளை பார்த்து, மன்மோகன் சிங் வாராமலேயே இருந்திருக்கலாம் என்று, பொதுநலவாய மாநாடு முடிவடைந்த பின்னர் இலங்கையரசு கவலைப்படும் நிலைமையை இந்திய நடுவண் அரசு ஏற்படுத்த வேண்டும். எதிர்ப்புகளை மீறி இலங்கை வந்தாலும், துன்புறும் தமிழ் மக்களின் நலன்களுக்காக தனது பயணத்தை இந்திய பிரதமர் சாணக்கியமாக பயன்படுத்திவிட்டார் என தமிழக மக்களும், இலங்கை வாழ் தமிழ் மக்களும் எண்ணி மகிழும் நிலைமையை இந்திய அரசு ஏற்படுத்த வேண்டும். வாராதீர்கள். வந்தால் இதை செய்யுங்கள் என்று இதுவே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. இலங்கையிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தங்கள் பிரமரின் அருகிலிருந்து இதை அவருக்கு எடுத்து சொல்லி காரியமாற்ற வேண்டும் என கேட்டுகொள்கின்றேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
பொதுநலவாய மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்துகொள்வது தொடர்பில் கருத்து வெளியிட்ட மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
இந்தியாவுக்கு வடக்கில் சீன, பாகிஸ்தான் எல்லைகளில் பகைமை நிலவுவதால், தென் முனையில் இலங்கையுடன் நட்பு பேணவேண்டும் என இந்திய கொள்கை வகுப்பாளர்கள் நீண்ட காலமாக நினைத்து வருகிறார்கள். அதனால்தான் இந்திய வம்சாவளி தோட்ட தொழிலாளர்களை நாடு கடத்தும் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் செய்யப்பட்டு, அதற்கு இந்தியா உடன்பட்டது. இதனால் இலங்கையில் இன்று தமிழர்களின் அரசியல் பலம் பாராளுமன்றத்தில் குறைந்து போனது. கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. முழுமையான அரசியல் தீர்வுக்கான உத்தரவாதம் இல்லாமலேயே, இலங்கையின் போர் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவுகளை வழங்கி, சர்வதேச சமூகத்தின் கண்டன நடவடிகைகளிலிருந்தும், இலங்கையை இந்தியா காப்பாற்றியது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இலங்கையில், இந்தியாவின் உண்மை நண்பர்கள் தமிழர்கள்தான் என்பதை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் புரிந்துகொள்ள வேண்டிய வேளை இன்று வந்துவிட்டது. எனவே பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் இலங்கை வரும் மன்மோகன் சிங், இலங்கை வந்து ஆற்றும் காரியங்கள், வெளியிடும் கருத்துகள், ஆகிய அனைத்தும் இலங்கை அரசுக்கு கடும் செய்திகளை தருகின்றவையாகவும், தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தருகின்றவையாகவும் இருக்க வேண்டும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இலங்கை அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கும் வைபவமாக இந்த பிரதமரின் வருகை அமைந்திடக்கூடாது.
இலங்கை வந்து மன்மோகன் வெளிப்படுத்தும் நிலைப்பாடுகளை பார்த்து, அவர் வாராமலேயே இருந்திருக்கலாம் என்று, பொதுநலவாய மாநாடு முடிவடைந்த பின்னர் இலங்கையரசு கவலைப்படும் நிலைமையையும், எதிர்ப்புகளை மீறி இலங்கை வந்தாலும், துன்புறும் தமிழ் மக்களின் நலன்களுக்காக தனது பயணத்தை இந்திய பிரதமர் சாணக்கியமாக பயன்படுத்திவிட்டார் என தமிழக மக்களும், இலங்கை வாழ் தமிழ் மக்களும் எண்ணி மகிழும் நிலைமையையும் இந்திய நடுவண் அரசு ஏற்படுத்த வேண்டும். இதுவே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply