காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு: கோவையில் 15 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் அடைப்பு
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தி தமிழ்நாட்டில் இன்று கடையடைப்பு மற்றும் ரெயில் மறியல் பேராட்டம் நடைபெறும் என்று தமிழ் அமைப்புகள் மற்றும் வணிகர் சங்கங்கள்கள் அறிவித்திருந்தன.அதன்படி நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், தேவாலா பகுதிகளில் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.
ஊட்டி மார்க்கெட் வழக்கம்போல் செயல்பட்டது. உழவர் சந்தைகளும் திறந்திருந்தன. ஆட்டோ, கால்டாக்சிகள் வழக்கம் போல் ஓடுகின்றன. ஊட்டி தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, ரோஜா பூங்கா மற்றும் அனைத்து சுற்றுலா தலங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று மளிகை கடைகள், பெட்டிக்கடைகள் மற்றும் சிறிய கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் ஓட்டல்கள், பேக்கரிகள் அனைத்தும் திறந்திருந்தன. பின்னலாடை நகரமான திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்பட்டன. அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோ, வாடகை கார்கள் வழக்கம்போல் ஓடுகின்றன. மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்திலும் வியாபாரிகள் தங்கள் கடைகளை அடைத்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். கோவை கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, பெரியகடை வீதி, ராஜவீதி, ஒப்பணக்கார வீதி மற்றும் உக்கடம், ஆர்.எஸ்.புரம், கோவை–பொள்ளாச்சி சாலைகளில் உள்ள பெரும்பாலான கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு சில பெட்டிக்கடைகள் மட்டும் திறந்திருந்தன. தனியார் மற்றும் அரசு பஸ்கள், ஆட்டோக்கள், கால்டாக்சிகள், வாடகை கார்கள் வழக்கம்போல் ஓடுகின்றன. இருப்பினும் பஸ்களில் கூட்டம் அதிகம் இல்லை.
கோவையில் இன்று நடைபெறும் போராட்டத்துக்கு தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம்(டேக்ட்), தமிழக கிரில் தயாரிப்பாளர்கள் நலச் சங்கம்(டாக்வா), சிறு குறுந்தொழில் முனைவோர் சங்கம்(சியா), கோவை குறுசிறு பவுண்டரி அதிபர்கள் சங்கம்(காஸ்மாபன்),
தமிழ்நாடு பம்ப் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர் சங்கம் (டாப்மா), கோவை வெட்கிரைண்டர்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம்(கவ்மா) ஆகியவையும் ஆதரவு தெரிவித்திருந்தன.
இந்த அமைப்புகளை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் மூடிக்கிடந்தன. தொழிலாளர்கள் யாரும் வேலைக்கு செல்லவில்லை.
கோவையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பஸ் நிலையம், ரெயில் நிலையம் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கோரிக்கையை வலியுறுத்தி ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ரெயில் நிலையத்தில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசாரும் ரோந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.
பொள்ளாச்சியில் கோவை ரோடு, மார்க்கெட் ரோடு, சத்திரம் வீதி உள்பட அனைத்து பகுதிகளிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு மீரான்சாகிப் தலைமையில் டி.எஸ்.பி.க்கள் பாலாஜி, ஆசைத்தம்பி ஆகியோர் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பஸ், ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடுகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply