2.1 பில்லியன் அமெரிக்க டொலர் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் ஹம்பாந்தோட்டையில் ஜனாதிபதி முன்னிலையில் 3 ஒப்பந்தங்கள் கைச்சாத்து
இலங்கைக்கு 2.1 பில்லியன் அமெரிக்க டொலர் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுத்தரும் 3 ஒப்பந்தங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் இன்று ஹம்பாந்தோட்டையில் கைச்சாத்திடப்பட இருப்பதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் 2100 முக்கிய வர்த்தகர்கள் பங்கேற்றிருப்பதாக கூறிய அவர், அவர்கள் சுற்றுலா, விவசாயம் உட்கட்டமைப்பு துறைகளில் முதலீடு செய்வதில் கூடுதல் ஆர்வம் காட்டுவதாகவும் குறிப்பிட்டார். முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சில் நேற்று ஊடகவியலாளர்கள் மாநாடு நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
சீன கொம்யுனிகேஷன் கன்ஸ்டரக்சன் கம்பனி கொழும்பு கோட்டை நகர அபிவிருத்தித் திட்டத்திற்காக 1300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்கிறது. அவுஸ்திரேலிய புரபட்டி எலியன்ஸ் கெபிடல் (தனியார்) கம்பனி கலப்பு திட்டமொன்றிற்காக 450 மில்லியன் அமெரிக்க டொலர்களும் மற்றொரு கலப்பு திட்டமொன்றில் எவிட் இன்டர்நெசனல் இன்ஜினியரின் (ஹொங்கொங்) கம்பனி 250 மில்லியன் அமெரிக்க டொலர்களும் முதலிட முன்வந்துள்ளன. இவை தொடர்பான ஒப்பந்தங்கள் இன்று கைச்சாத்திடப்படுகின்றன. இந்த நேரடி முதலீடுகள் தவிர மற்றொரு பிரதான முதலீடொன்றும் கிடைக்கவுள்ளது.
கடந்த வருடம் இலங்கைக்கு 1.2 பில்லியன் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் கிடைத்தன. இவ்வருடம் 2 பில்லியன் நேரடி முதலீடுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத் தேசிய உற்பத்தியில் 4 வீதம் நேரடி வெளிநாட்டு முதலீடு மூலம் கிடைத்தாலே பொருளாதார வளர்ச்சி வீதம் 8 ஆக உயரும். இதற்காக வருடாந்தம் மூன்று பில்லியன் டொலர் நேரடி முதலீடுகள் கிடைக்க வேண்டும். இன்று கைச்சாத்திடப்படும் ஒப்பந்தங்களின் பலன் அடுத்த வருடம் எமக்கு அனுபவிக்க முடியுமாகும்.
வர்த்தக மாநாட்டில் எதிர்பார்த்ததை விட அதிக வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் 138 பிரித்தானியர்களும் 71 இந்தியர்களும் 31 பங்களாதேஷ் நாட்டவர்களும் 85 சீன நாட்டவர்களும் 17 மலேசிய நாட்டவர்களும் அடங்குவர். 65 இற்கும் மேற்பட்ட நாட்டவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இதனூடாக இலங்கைக்கு கூடுதல் முதலீடுகள் கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply