தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க வலியுறுத்தி, ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம்!
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை தடுக்க வலியுறுத்தி, முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது. தமிழகத்தைச் சேர்ந்த அப்பாவி மீனவர்கள் தங்கள் பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடிக்கும்போது இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கடத்தப்படுவது குறித்தும், அவர்களை பாதுகாப்பது தொடர்பாகவும், இதுபோன்ற தொடர் தாக்குதலை தடுப்பதற்கு இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நான் பலமுறை தங்களுக்கு வலியுறுத்தியுள்ளேன். ஆனால், மத்திய அரசு இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்கள் அதிகரித்துவிட்டது.கடந்த புதன்கிழமை, நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 325 மீனவர்கள் 47 படகுகளில் சென்றபோது, அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்க முயன்றுள்ளனர். தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதையடுத்து 15 படகுகளில் சென்ற 110 மீனவர்கள் இலங்கை கடற்படையினரிடம் சரண் அடைந்தனர். மற்ற 32 படகுகளில் சென்ற 215 மீனவர்களை திருப்பி அனுப்பியுள்ளது. கைது செய்யப்பட்ட 110 தமிழக மீனவர்களும் திரிகோண மலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள் இன்று 8 படகுகளில் சென்றபோது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
இவ்வாறு மீனவர்களை மொத்தமாக கடத்துவது மிக மோசமான நடவடிக்கையாகும். இலங்கை அரசின் அனுமதியில்லாமல் இதுபோன்ற செயல் நடக்காது. இதனால், இந்தியாவின் மரியாதை மிகவும் பாதிக்கப்படுகிறது.
எனவே, மத்திய அரசு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்லியில் உள்ள இலங்கை தூதருக்கு சம்மன் அனுப்பி கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். இனியும் காலம் தாழ்த்தாமல் இலங்கை அதிபரை பிரதமர் நேரடியாக தொடர்பு கொண்டு கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். இலங்கை கடற்படையினரின் இதுபோன்ற நடவடிக்கை மீண்டும் நடக்காத வகையில் தடுத்து நிறுத்தி, தமிழக மீனவர்களை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply