ஏமனில் நடைபெற்ற ஆளில்லா விமானத்தாக்குதலில் திருமணக் கோஷ்டியினர் 13 பேர் பலி
ஏமன் நாட்டின் பெய்டா மாகாணத்தில் உள்ள ரட்டா நகரம் அல்-கொய்தா தீவிரவாதிகளின் கோட்டையாகக் கருதப்படுகின்றது. இவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றும் முயற்சியில் அந்நாட்டு ராணுவம் ஆயுதம் ஏந்திய பழங்குடி மக்களுடன் இணைந்து இந்த ஆண்டு துவக்கத்தில் தொடர்தாக்குதல்களை நடத்தியது.நேற்று மீண்டும் இங்கு நடைபெற்ற அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் திருமணம் ஒன்றிற்கு சென்றுகொண்டிருந்த வாகனங்கள் தாக்கப்பட்டுள்ளன. அதில் 13 பேர் பலியாகி உள்ளதாக அந்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களின் விபரங்கள் குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. அல்-கொய்தாவினரின் வாகனங்கள் என்று தவறாகக் கருதப்பட்டதால் தாக்குதல் நடைபெற்றதாகக் கூறப்படுகின்றது. தீக்கிரையான வாகனங்களின் இடையே இறந்துகிடந்தவர்களில் உள்ளூரில் பரிச்சயமான பழங்குடி மக்களின் உடல்களும் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும்,அல்-கொய்தா தீவிரவாதிகளும் இந்தக் குழுவினருடன் சென்றதாக அவர்கள் சந்தேகிக்கின்றனர்.ஏமெனில் நடைபெறும் தனது ஆளில்லா விமானத் தாக்குதல்களை ஒப்புக்கொள்ளும் அமெரிக்க அரசு பொதுவாக தனிப்பட்ட தாக்குதல்கள் குறித்து தெரிவிப்பதில்லை என்று கூறப்படுகின்றது.
எனினும், இந்தத் தாக்குதலில் இறந்தவர்கள் அனைவரும் பொதுமக்களே என்பது ஊர்ஜிதமானால் ஏற்கனவே அமெரிக்கா மீதும், உள்நாட்டு அரசின் மீதும் கோபத்தில் இருக்கும் மக்களை இந்த சம்பவம் மேலும் தூண்டிவிடுவதாக அமையக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply