காங்கிரஸ் தலைவர் சோனியாவின் பாஸ்போர்ட் நகலை சமர்ப்பிக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக சீக்கிய அமைப்பு தொடர்ந்திருந்த வழக்கு குறித்து விசாரிக்க, அவரது பாஸ்போர்ட்டின் நகலை சமர்ப்பிக்குமாறு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள் சிலரை பாதுகாத்து வருவதாக சீக்கிய மனித உரிமைகள் அமைப்பு சோனியா காந்தி மீது வழக்கு தொடர்ந்திருந்தது.
புற்றுநோய் சிகிச்சைக்காக கடந்த ஆண்டு செப்டம்பர் 2 முதல் 12-ஆம் தேதிவரை சோனியா காந்தி அமெரிக்கா தங்கியிருந்ததாகவும், அப்போது வழக்கு தொடர்பான சம்மனை செப்டம்பர் 9ஆம் தேதி அவரிடம் வழங்கியதாகவும் அந்த இயக்கம் தெரிவித்திருந்தது.
ஆனால், குறிப்பிட்ட அந்த நாள்களில் தாம் அமெரிக்காவிலேயே இல்லை என சோனியா காந்தி கடிதம் மூலம் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்துவரும் மன்ஹாட்டன் நீதிமன்ற நீதிபதி பிரையன் கோகன் வியாழக்கிழமை கூறுகையில், சீக்கிய அமைப்பினர் குறிப்பிடும் நாள்களில் சோனியா காந்தி அமெரிக்காவில் இல்லை என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை. எனவே செப்டம்பர் 2-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை அவர் இங்கு தங்கியிருக்கவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், பாஸ்போர்ட் நகல் போன்ற ஏதாவது ஒரு ஆதாரத்தை ஏப்ரல் 7-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டார். இது குறித்து சோனியா காந்தியின் வழக்குரைஞர் ரவி பத்ரா கூறுகையில், சீக்கிய அமைப்பினரின் கண்ணாமூச்சி விளையாட்டால் நேரம் விரயமாவதைத் தவிர்க்கும் வகையில், வழக்கை விரைந்து முடிப்பதற்காக சோனியாவிடமிருந்து ஆதாரங்களை நீதிபதி கேட்டுள்ளார்” என்று தெரிவித்தார். சீக்கிய அமைப்பினருக்கான சட்ட ஆலோசகர் குர்பத்வந்த் சிங் கூறுகையில், ஏப்ரல் 7-ஆம் தேதிக்குள் சோனியா காந்தி ஆதாரத்தை சமர்ப்பிக்கவில்லை என்றால், அதன் அடிப்படையில் அவர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்குமாறு நீதிமன்றத்தை அணுகுவோம்” என்று கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply