நாட்டுக்காக வாழ்வதும், சாவதும்தான் எங்கள் சித்தாந்தம்: மோடி

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், “ஒரு தனிப்பட்ட நபர் என்ற முறையில் நரேந்திரமோடிக்கு எதிராக என்னிடம் ஏதுமில்லை. ஆனால் இந்தியாவுக்கு எதிரான அவரது சித்தாந்தத்தை நான் எதிர்க்கிறேன். மோடி, ஒரு பிரத்யேகமான சித்தாந்தத்தை பிரதிபலிக்கிறார். அது, மக்களை ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளச்செய்யும் சித்தாந்தம்” என கூறினார்.

உத்தரபிரதேச மாநிலம், பாக்பத்தில் (முன்னாள் பிரதமர் சரண்சிங் தொகுதி) நரேந்திரமோடி நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டபோது, தனது சித்தாந்தம் பற்றி ராகுல்காந்தி கூறிய கருத்துக்கு பதிலடி கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் ஒரு சித்தாந்தத்தில் இருந்து தோன்றியவன் என்று கூறிக்கொள்வதில் பெருமிதப்படுகிறேன். ஆமாம். எங்களுக்கென்று ஒரு சித்தாந்தம் இருக்கிறது. குடும்பத்தை விட சமூகம் மேலானது என்பதுதான் எங்கள் சித்தாந்தம். இந்தியத் தாய்நாடுதான் எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்பது எங்கள் சித்தாந்தம். இந்த நாட்டுக்காக வாழ்வதும், சாவதும்தான் எங்கள் சித்தாந்தம்.

எனவேதான் நீங்கள் இந்த சித்தாந்தத்துடன் போட்டி போட முடியாது. உங்கள் (ராகுல் காந்தி) ஒட்டுமொத்தக் குடும்பமும் இந்த சித்தாந்தத்துடன் போட்டி போட இயலாது. இந்த சித்தாந்தத்துக்கு அடிப்படை, தியாகம், சேவை என்ற வழிபாட்டுக்குரிய அம்சங்கள்தான்.

விவசாயிகள் பலன்பெறத்தக்க விதத்தில், காங்கிரசின் கொள்கைகளை எதிர்த்த சவுத்ரி சரண்சிங்கை நாங்கள் மதிக்கிறோம். தனது பெற்றோரின் கனவுகளை குழந்தை நிறைவேற்ற வேண்டும். ஆனால் அவரது மகன் (அஜித் சிங்), தனது தந்தையின் பாதையில் இருந்து தடம் புரண்டு விட்டார். சமூகத்திலும்கூட, தந்தையின் பாதையை விட்டுச்செல்லும் பிள்ளையை சமூகம் ஏற்றுக்கொள்ளாது.

ஆட்சி அதிகாரத்துக்காக தந்தையின் கொள்கைகளைவிட்டு மட்டுமல்லாமல், தன் தந்தைக்கு கஷ்டங்களை தந்த கட்சிக்கே போய்விட்டவரையா நீங்கள் நம்பப்போகிறீர்கள்? பாக்பத்துக்கு தேவை அடிமட்டத் தலைவர்தான்.

நாட்டுக்காக உயிர் துறந்த வீரர்கள், தங்களுக்கு உரிய மரியாதையைப் பெறுவதில்லை.

பாகிஸ்தான் மீது மத்திய அரசு மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கிறது. பாகிஸ்தான் ராணுவம் நமது வீரர்களின் தலையை துண்டித்து கொலை செய்கிறது. ஆனால் அந்த நாட்டுத்தலைவருக்கோ மத்திய அரசு அறுசுவை விருந்து படைக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply