பஹ்ரைன் சென்றடைந்த ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு பஹ்ரைன் சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு அந்நாட்டில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. பஹ்ரைன் தலைநகர் மனாமாவைச் சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு அந்நாட்டின் பிரதமர் கலீபா பின் சல்மான் பின் ஹமாத் அல்-கலிபா இளவரசரும் முபாரக்கின் ஆளுநர் சல்மான் பின் ஹிந்தி அவர்களும் விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பளித்தனர். இரு நாட்கள் பஹ்ரைனில் தங்கியிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டின் மன்னர் ஹமாத் பின் இஸா அல் கலீபா அவர்களுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார். அதனையடுத்து இரு நாட்டிற்கும் முக்கியத்துவம் வாய்ந்த சில புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் இலங்கையின் முன்னணி வர்த்தக தூதுக் குழுவொன்றும் பஹ்ரைன் சென்றுள்ளதுடன் பஹ்ரைன் வர்த்தகத் தூதுக் குழுவுக்கும் இலங்கை வர்த்தகத் தூதுக் குழுவுக்குமிடையில் முக்கிய கூட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பஹ்ரைனில் வசிக்கும் இலங்கையர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
பஹ்ரைன் இராச்சியமானது பாரசீக வளைகுடாவின் மேற்கு கடற்பகுதியை அண்டிய சிறியதீவு நாடாகும். எரிபொருள் வளமுள்ள செல்வந்த நாடாகத் திகழும் பஹ்ரைனில் அண்மைக் காலங்களில் வங்கி, நிதி மற்றும் சுற்றுலாத்துறைகளில் பாரிய முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்நாட்டின் தலைநகரான மனமாவில் முன்னணி நிதி நிறுவனங்கள் பல இயங்குகின்றன. கடந்த சில வருடங்களாக பஹ்ரைனானது அரபுலகில் துரித முன்னேற்றம் கண்டு வரும் பொருளாதார வளர்ச்சி மிகுந்த நாடாக இனம் காணப்பட்டு வருகிறது.
இலங்கைக்கும் பஹ்ரைனுக்குமிடையில் 1992 ஆம் ஆண்டு முதல் உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், தொழிலுறவுகள் பிரதியமைச்சர் சரத் வீரசேகர, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் ஜனாதிபதியுடன் இவ்விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply