நிர்மாணத்துறைகளில் இளைஞர்களை ஊக்குவிக்க விசேட வேலைத் திட்டம்

எமது எதிர்கால சந்ததியினர் நிர்மாணத் துறையில் ஆர்வத்துடன் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் கட்டிட நிர்மாணத் துறையினருக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படுவதாக நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். இளைஞர், யுவதிகள் நவீன உலகின் சவால்களை வென்றெடுப்பதற்கு இத்துறையில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். மஹாபிமானி 2014 தேசிய நிர்மாண விருது விழா ஏற்பாடு தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு நேற்று முன்தினம் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றுகையில், பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தேசிய நிர்மாண விருது விழா கடந்த வருடம் வெற்றிகரமாக நடைபெற்றது. இரண்டாவது தடவையாக நடைபெறும் இவ்விருது விழா டிசம்பர் மாதம் 18ம் திகதி கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இவ்விருது விழாவில் நாடளாவிய ரீதியில் இருந்து நிர்மாணத்துறையில் ஈடுபட்டுள்ள சிறந்த நிர்மாண நிறுவனங்கள், நிர்மாண தொழில்சார் துறையினர், நிர்மாண கலைஞர்கள் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

மஹாபிமானி போட்டியில் பங்குபற்ற விரும்புவோர் நாட்டின் சகல பிரதேச செயலகங்களிலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள முடியும். நிர்மாண கலைஞர்களுக்கான விருது 12 பிரிவுகளின் கீழ் வழங்கப்பட உள்ளது. குறிப்பாக மேசன், தச்சன், வர்ணப்பூச்சு கலைஞர், குழாய் பொருத்துனர் உட்பட பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இந்தத் துறையை வளர்த்தெடுப்பதற்காக அரசாங்கம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வரும் இவ்வேளையில் இத்துறையில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இத்துறையுடன் சம்பந்தப்பட்டவர்கள் எதிர்கால சவால்களை முறியடிக்கும் வகையில் புதிய நுட்பங்களையும், தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துவதற்கு தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கட்டிடத்துறையில் ஈடுபடுவோர் மாதாந்தம் சிறந்த வருமானத்தை பெற்றுக் கொள்கின்ற போதிலும் இளைஞர்கள் இத்தொழில்துறையை நாடுவதில் அசமந்தப் போக்கில் இருக்கின்றனர். அதற்கு காரணம் இந்தத் துறை சற்று கடினமான தொழிலாக காணப்படுவதாகும். எவ்வாறாயினும் அதிகளவு வருமானத்தை பெறக்கூடிய துறையாக நிர்மாணத்துறை காணப்படுகிறது.

எனவே, இளைஞர்கள் இந்தத்துறையில் ஈடுபட்டு நாட்டுக்கும் பொருளாதாரத்திற்கும் பங்களிப்பு வழங்கும் வகையில் இத்துறையை வளர்ச்சியடையச் செய்ய வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply