இரவு ஓய்வுக்கு பின்னர் பிராங்க்பர்ட் நகரில் இருந்து நியூ யார்க் புறப்பட்டார், மோடி
ஐக்கிய நாடுகள் சபையின் 69-வது பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவதற்காக புது டெல்லியில் இருந்து நேற்று தனி விமானம் மூலம் 5 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, நியூ யார்க் நகரத்துக்கு செல்லும் வழியில் ஜெர்மனி நாட்டின் மிகப்பெரிய மாநகரமான பிராங்க்பர்ட் நகரில் நேற்றிரவு தங்கி ஓய்வெடுத்தார். ஓய்வுக்கு பின்னர் பிரதமரின் தனி விமானம் நியூ யார்க் நகருக்கு புறப்பட்டது.
நியூ யார்க்கில் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் பலியானவர்களின் நினைவிடத்தில் நாளை (27-ந் தேதி) மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் பிரதமர் மோடி, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார்.
பல்வேறு உலக தலைவர்களையும் சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பின்னர், ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, உலக வங்கியின் தலைவர் ஜிம்யாங் கிம், நார்வே பிரதமர் எர்னா சொல்பெர்க், நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா உள்ளிட்ட உலகத்தலைவர்கள் பங்கேற்கிற விழாவில் கலந்துகொள்கிறார்.
28-ந் தேதி நியூயார்க் நகரின் மேடிசன் சதுக்க கார்டன் அரங்கில் பிரதமர் மோடிக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் பிரமாண்ட வரவேற்பு அளிக்கிறார்கள்.
20 ஆயிரம் பேர் கலந்துகொள்கிற இந்த வரவேற்பில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ‘மிஸ் அமெரிக்கா’ அழகி நினா தவுலுரி, டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் ஹரிசீனிவாசன் போன்றவர்கள் பங்கேற்று சிறப்பு சேர்க்கிறார்கள்.
இந்த வரவேற்பு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றுவதை அமெரிக்காவில் உள்ள 20 பெருநகரங்களில் வாழும் இந்தியர்கள் மத்தியில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
29-ந் தேதி வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்கு செல்லும் மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இரவு விருந்து அளித்து கவுரவிக்கிறார். இரு தலைவர்களின் சந்திப்பு மறுநாளும் (30-ந் தேதி) தொடர்ந்து நடக்கிறது.
30-ந் தேதி அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பிடென் பிரதமர் மோடிக்கு மதிய விருந்து அளிக்கிறார். அதனைத் தொடர்ந்து அமெரிக்க தொழில் அதிபர்களை சந்தித்துப் பேசும் மோடி இந்தியா திரும்புவதாக திட்டமிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply