அவுஸ்திரேலியா வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை கம்போடியாவில் குடியமர்த்துவதற்கு உடன்படிக்கை

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகுகளில் வரும் புகலிடக்கோரிக்கையாளர்களை கம்போடியாவில் மீளக் குடியமர்த்துவதற்கான முக்கியத்துவம் மிக்க உடன்படிக்கை கம்போடிய தலைநகர் ‘னொம் பென்னில்’ வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட்டது. இந்த உடன்படிக்கையில் அவுஸ்திரேலியா சார்பில் அந்நாட்டு குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிஸன் கைச்சாத்திட்டுள்ளார்.

மேற்படி, புகலிடக்கோரிக்கையாளர்களை மீளக் குடியமர்த்தும் செயற்பாட்டிற்காக கம்போடியாவுக்கு 40 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் பெறுமதியான பணம் 4 வருடங்களுக்கு செலுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி, உடன்படிக்கைக்கு மனித உரிமைக்குழுக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

தனது சொந்த மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கே திண்டாடும் கம்போடியா அகதிகளை உள்வாங்குவதற்கு போதிய வசதிகளைக் கொண்டிராத நாடாகவுள்ளதாக அந்தக்குழுக்கள் தெரிவிக்கின்றன.

இதன் பிரகாரம் அவுஸ்திரேலியா தனது அகதிகள் தொடர்பான சர்வதேச ரீதியான கடப்பாட்டை அலட்சியம் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டுகின்றன.

இந்நிலையில் ஸ்கொட் மொரிஸன் கொள்கைக்கான இலக்குகளை நோக்கிய முன்னடியெடுத்து வைப்பதாக இந்த உடன்படிக்கை உள்ளதாக தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவில் எவருமே மீள் குடியமர்த்தப்பட மாட்டார்கள் என எடுத்தியம்பும் கொள்கை பூரணப்படுத்துவதை இந்த உடன்படிக்கை எமக்கு சாத்தியமாக்கியுள்ளது என அவர் கூறினார்.

இந்தோனேஷியாவிலிருந்து புகலிடக் கோரிக்கையாளர்களின் படகுகள் வருவதைத் தடுக்கும் இலக்கில் சர்ச்சைக்குரிய கொள்கைகளை அவுஸ்திரேலியா அண்மைய மாதங்களில் அறிமுகப்படுத்தியிருந்தது.

புகலிடக் கோரிக்கையாளர்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பில் பல்வேறு அபிவிருத்தி உதவித் திட்டங்களுக்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பணம் கம்போடியாவுக்கு வழங்கப்படவுள்ளதாக ஸ்கொட் மொரிஸன் அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

ஏற்கனவே கம்போடியாவுக்கு வழங்கப்பட்ட 79 மில்லியன் அவுஸ்திரேலிய டொலருக்கு மேலதிகமாக இந்தத் தொகை வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

நாவுறு தீவிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான தடுப்பு நிலையத்தில் புகலிடக் கோரிக்கை பரிசீலிக்கப்படும் வரை தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் உண்மையான அகதிகளாக இனங்காணப்பட்டவர்கள் மட்டுமே கம்போடியாவுக்கு அனுப்பப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேற்படி, உடன்படிக்கையின் பிரகாரம் உண்மையான அகதிகளில் கம்போடியாவுக்கு செல்வதற்கு விரும்புபவர்கள் மட்டுமே அங்கு குடியமர்த்தப்படவுள்ளதாக தெரிவித்த ஸ்கொட் மொரிஸன் கம்போடியாவுக்கு அகதிகளை அனுப்பும் செயற்கிரமம் இந்த வருடத்தின் இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறினார்.

இது தொடர்பில் கம்போடியாவின் உள்துறை அமைச்சர் சார் கென் விபரிக்கையில் 2 முதல் 5 வரையான குறைந்த தொகையுள்ள அகதிகளையே தாம் ஏற்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அகதிகளை உள்வாங்குவதற்கு கம்போடியாவில் போதிய வசதிகள் உள்ளதா என ஸ்கொட் மொரிஸனிடம் வினவப்பட்ட போது, கம்போடியா பெரிதும் முன்னேற்றம் அடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

எனினும் வறிய ஊழல்மிக்க நாடென்றாகவுள்ளதாகவும் அது கடந்த காலங்களில் அகதிகளை அவர்கள் துன்புறுத்தல்களுக்குள்ளாக்கி வந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பி வந்துள்ளதாக மனித உரிமைக் குழுக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இந்த உடன்படிக்கை புகலிடக் கோரிக்கையாளர்களை வருந்தத்தக்க வகையில் தாட்சண்யமற்ற முறையில் அவுஸ்திரேலியா நடத்தி வருவதற்கான புதிய எடுத்துக் காட்டாக உள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

உலகின் மிகவும் பாதிக்கப்படக் கூடிய சிலரை பாதுகாப்பதை விடவும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குறுகிய கால அரசியல் அக்கறைகளுக்கு அதிகாரிகள் முன்னுரிமை கொடுத்துள்ளதாக அந்த சபை குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்நிலையில் இந்த உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவுஸ்திரேலியாவை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் அகதிகள் செயற்பாட்டு கூட்டமைப்பு சிட்னி நகரில் எதிர்ப்பு ஊர்வலமொன்றை வெள்ளிக் கிழமை நடத்தியது.

கம்போடிய அரசாங்கத்துக்கு மனித உரிமைகளை குழித்தோண்டிப் புதைக்க 40 மில்லியன் டொலரை வழங்குவதை விடுத்து அந்தப்பணத்தை கம்போடியா மற்றும் அவுஸ்திரேலியாவிலுள்ள தேவைப்பாடுள்ளவர்களுக்கு உதவிகளையும் சேவைகளையும் வழங்க செலவிட்டிருக்க முடியும் என மேற்படி அமைப்பின் பேச்சாளர் அயன் றின்டோல் கூறினார்.

அதேசமயம் மேற்படி உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கம்போடியாவிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகத்துக்கு முன்னர் பௌத்த மதகுருமார் உட்பட சுமார் 100 பேர் வெள்ளிக்கிழை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சொந்த நாட்டு மக்களின் தேவைகளே நிறைவேற்றப்படாத நிலையில் புதிதாக அகதிகள் அந்நாட்டில் மீள் குடியமர்த்தப்படுவது குறித்து அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply