9 அல்லது 10–ந்தேதி மந்திரிசபை மாற்றம்? பிரதமர் மோடி ஆலோசனை

மத்திய மந்திரி சபையில் அருண்ஜேட்லி உள்பட சிலர் இரண்டு இலாகாக்களை வகித்து வருகிறார்கள்.அதுபோல ராஜாங்க மந்திரிகளும் நிர்வாக சுமையுடன் உள்ளனர். மேலும் சில பெரிய மாநிலங்களுக்கு மந்திரி சபையில் உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்ற குறை உள்ளது.மந்திரி சபையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் மந்திரி சபையை மாற்றி அமைக்கவும், சில மந்திரிகளின் இலாகாக்களை மாற்றவும் பிரதமர் நரேந்திரமோடி முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் பா.ஜ.க. மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.மேலும் கடந்த 5 மாதங்களில் மத்திய மந்திரிகளின் செயல்பாடுகளையும் மோடி கண்காணித்தப்படி உள்ளார். அதன் அடிப்படையில் மந்திரிசபையில் மாற்றங்கள் செய்யப்படும் என்று தெரியவந்துள்ளது.

கோவா முதல்–மந்திரி மனோகர் பரிக்கர் மத்திய மந்திரிசபையில் இடம் பிடிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புத்துறை அவர் வசம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது. பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக மோடி பெயர் அறிவிக்கப்பட்டதும் அதற்கு முதல் ஆதரவு குரல் கொடுத்தது பரிக்கர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அரியானா மாநிலத்தை சேர்ந்த ஜாட் இனத்தலைவர் பிரேந்திர சிங்கும் மத்திய மந்திரி சபையில் மிக முக்கிய இலாக்காவை பெறுவார் என்று தெரியவந்துள்ளது. அரியானா முதல்–மந்திரியாக ஜாட் இனத்தை சாராத ஒருவரை தேர்வு செய்ததால், ஜாட் இன மக்களை திருப்திப்படுத்தும் வகையில் பிரேந்திர சிங்குக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மராட்டிய மாநில எம்.பி.ஹன்ஸ் அகிர், பீகார் மாநில எம்.பி. கிரிராஜ் சிங், ஜார்க்கண்ட் மாநில எம்.பி.யும் முன்னாள் நிதி மந்திரி யஷ்வந்த் சின்காவின் மகன் ஜெயந்த் சின்கா ஆகியோரும் மத்திய மந்திரி சபையில் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது. மேற்கு வங்க மாநிலத்துக்கும் கூடுதல் பிரதிநிதித்துவம் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தவிர நிர்மலா சீதாராமன் உள்பட சில ராஜாங்க மந்திரிகளை காபினெட் அந்தஸ்துக்கு உயர்த்தவும் பிரதமர் மோடி ஆலோசித்து வருகிறார். மோடி நாளை, நாளை மறுநாள் 2 நாட்கள் வாரணாசி சென்று விடுவதால் உடனே மந்திரிசபை மாற்றம் இருக்காது.

வாரணாசியில் இருந்து டெல்லி திரும்பிய பிறகு 11–ந்தேதி வெளிநாடு சுற்றுப் பயணத்தை மோடி தொடங்குகிறார். எனவே 9 அல்லது 10–ந்தேதி மத்திய மந்திரி சபை மாற்றம் நடைபெறக்கூடும்.

இந்த நாட்களில் மந்திரிசபை மாற்றப்படாவிட்டால் பாராளுமன்ற கூட்டத் தொடர் டிசம்பர் மாதம் 22–ந்தேதி முடிந்த பிறகே மந்திரிசபை மாற்றம் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply