தற்கொலைக்கு முயற்சிப்பவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு
தற்கொலை முயற்சிக்கு தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை இ.பி.கோ.வில் இருந்து நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், காஷ்மீர் சட்டசபை தேர்தலையொட்டி, அங்குள்ள கதுவா என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை விதிப்பது சரிதான். ஆனால், ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிர் பிழைத்தால், அவருக்கு தண்டனை விதிக்கிறோம். எனவே, இப்பிரச்சினையை மாநில அரசுகளுடன் விவாதித்து, அந்த சட்டப்பிரிவை நீக்க முடிவு செய்துள்ளோம்.
தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களின் பிரச்சினைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு தண்டனை அளிக்கக்கூடாது. அந்த பாதை சரியல்ல என்று பெற்றோர், சகோதர, சகோதரிகள் மூலம் கவுன்சிலிங் அளிக்க வேண்டும்.
தற்கொலை மூலம் பிரச்சினைகள் தீர்ந்து விடாது. எனவே, தற்கொலை செய்து கொள்ளாதீர்கள்.
காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியோ, மக்கள் ஜனநாயக கட்சியோ யார் ஆட்சிக்கு வந்தாலும், அதில் காங்கிரசும் பங்கேற்கிறது. எல்லா பலன்களையும் அனுபவிக்கிறது. தேர்தல் நெருங்கும்போது, அரசில் இருந்து வெளியேறி விட்டு, அந்த அரசு செய்தது எல்லாம் தவறு என்று பிரசாரம் செய்கிறது.
இத்தகைய காங்கிரஸ் கட்சியை வாக்காளர்கள் தண்டிக்க வேண்டும். இல்லாவிட்டால், அக்கட்சி தனது தவறை சரிசெய்து கொள்ளாது.
அதுபோல், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை குடும்ப அரசியல் நடத்துகின்றன. அவர்கள் குடும்பத்தினரைத் தவிர, வேறு யாருமே ஆட்சி நடத்த தகுதியானவர்கள் இல்லையா?
நாங்கள் பதவிக்கு வந்த ஆறு மாதங்களில், இந்தியாவை வலிமையான நாடாக உலக நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. இதற்கு மோடி காரணம் அல்ல, நீங்கள்தான் காரணம்.
காஷ்மீர் தேர்தலில் பெருவாரியாக வாக்களித்து, ஏ.கே.47 ரக துப்பாக்கியை விட, மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரம் வலிமையானது என்று காட்டி இருக்கிறீர்கள்.
பா.ஜனதாவுக்கு முதல்முறையாக ஆதரவு தாருங்கள். அபிவிருத்தி பணிகள் மூலம்தான் காஷ்மீரின் தலையெழுத்தை மாற்ற முடியும். அதற்கு எங்களுக்கு வாய்ப்பு அளியுங்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply