ஒபாமா வருகையைக் கண்டித்து போராட்டம்
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதுதொடர்பாக கோவை மாவட்ட புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி அமைப்பு உள்பட மூன்று சங்கங்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: போபால் விஷவாயு தாக்குதலுக்குக் காரணமான முதன்மை குற்றவாளி யூனியன் கார்பைட் நிறுனத் தலைவர் வார்ன் ஆண்டர்சனை குற்றவாளி என இந்திய நீதிமன்றம் அறிவித்தது. எனினும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் இறக்கும் வரை இந்தியாவிடம் அவரை ஒப்படைக்க அமெரிக்கா தவறிவிட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து நாங்கள் போராட்டம் நடத்த உள்ளோம்.
இந்தப் போராட்டத்துக்கு அனுமதி கோரி போலீஸ் அதிகாரிகளிடம் மனு அளித்தோம். ஆனால், போராட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். எனவே, அமெரிக்க அதிபர் வருகைக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் குடியரசு தினத்தன்று பள்ளிகள், அரசு அலுவலகங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதால் அதற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியுள்ளது.
அதனால், அன்றைய தினம் போராட்டத்துக்கு அனுமதி வழங்குவது கடினம் எனத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, மனுதாரர் அன்றைய தினம் அல்லாமல் வேறு தினத்தன்று போராட்டம் நடத்த, தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளிடம் அனுமதி கோரலாம். அதை சட்ட விதிகளுக்குள்பட்டு அதிகாரிகள் பரிசீலனை செய்ய வேண்டும். எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply