ரிசாத் பதியுதீன் பணம் பெற்று தொழில் வழங்கினாரா? நிரூபித்தால் பதவி விலகுவேன் : றிப்கான்
அமைச்சர் ரிசாத் பதியுதீன் பணம் பெற்றுக் கொண்டு தொழில் வழங்கினாரென்று எவராவது நிரூபித்தால் மாகாண சபை உறுப்பினர் பதவியை தான் இராஜினாமா செய்வதாக றிப்கான் பதியுதீன் தெரிவித்தார். வடமாகாண சபையில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அமைச்சர் பற்றி தெரிவித்த கருத்துக்களை மறுதலித்து மாகாண சபையில் உரையாற்றிய அவர் இந்த சவாலை வெளியிட்டார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் எப்போதுமே கறுப்புக் கண்ணாடி கொண்டு, பார்ப்பதைக் கைவிட்டு அமைச்சரின் அபிவிருத்திப் பணிகளுக்கும் நல்ல பல திட்டங்களுக் கும் ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
வடமாகாண சபை உறுப்பினர்களான சுகிர்தன், சர்வேஸ்வரன், பிரிமுசிராய் போன்றவர்கள் உண்மைகளைத் திரிபுபடுத்தி அரசியல் பிழைப்புக்காக வாய்க்கு வந்தபடி பேசுவதை உடன் கைவிட வேண்டுமென அவர் கோரினார்.
வடக்கிலுள்ள மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, சமுர்த்தி பயனாளிகள் நேர்மையான முறையில் தெரிவு செய்யப்பட்டு மிக நேர்த்தியாக நிவாரணங்களும் கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்றன.
இதில் எந்தவிதமான குறைபாடுகளும் இடம்பெறவில்லை. அதேபோன்று ஆசிரிய நியமனங்கள், சமுர்த்தி அதிகாரிகள் தெரிவில் எந்தவிதமான குளறுபடிகளும் இல்லை. இந்த நியமனங்கள் இன, மத பிரதேச வேறுபாடின்றியே வழங்கப்பட்டன. அத்துடன் கல்வித்தராதரம் பேணப்பட்டது. எனவே அமைச்சர் மீது காழ்ப்புணர்வு கொண்ட சக்திகள் வேண்டுமென்றே தூற்றுவதை மாத்திரம் தொழிலாகக் கொண்டு செயலாற்றக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் சேவையே எங்கள் குறிக்கோள். நாம் மனசாட்சிக்கு ஏற்புடையதாகவே அரசில் பணியாற்றுகின்றோம் எனவும் குறிப்பிட்ட றிப்கான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்கள் தமது கடந்த காலச் செயற்பாடுகளைப் போலன்றி இனியாவது ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்க வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply