மீனவர் பிரச்னையில் மனிதாபிமானம் தேவை: இலங்கைப் பிரதமரிடம் சுஷ்மா வலியுறுத்தல்

மீனவர் பிரச்னையை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும் என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தினார். இந்திய அரசால் கைது செய்யப்பட்ட இத்தாலி கடற்படை வீரர்கள் விவகாரத்தையும், தமிழக மீனவர்கள் விவகாரத்தையும் ஒப்புமைப்படுத்த வேண்டாம் என்றும் அவரிடம் சுஷ்மா தெரிவித்தார். இலங்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக அடுத்த வாரம் செல்கிறார். இந்தப் பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்யும் பொருட்டு, இலங்கைக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வெள்ளிக்கிழமை சென்றார்.

இந்நிலையில், இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பேட்டியில், “இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்து, இலங்கையின் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை தமிழக மீனவர்கள் எடுத்துச் சென்று விடுகின்றனர்; எனது வீட்டின் கதவை உடைத்து யாராவது உள்ளே நுழைய முயன்றால், அவர்களை நான் சுடுவேன்; அதில், ஒருவேளை அவர்கள் கொல்லப்பட்டாலும் கூட, அதற்கான அனுமதியை சட்டம் எனக்கு அளிக்கிறது’ எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், கேரள மாநிலம் கொல்லம் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால் இத்தாலி கடற்படையினர் கைது செய்யப்பட்ட விவகாரத்தையும், தமிழக மீனவர் விவகாரத்தையும் அவர் ஒப்புமைப்படுத்தி பேசியிருந்தார்.

இந்தப் பரபரப்பான சூழலில், கொழும்பில் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சுஷ்மா ஸ்வராஜ் சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், மீனவர் விவகாரம் என்பது மனிதாபிமான ரீதியிலானது என்றும், அது வாழ்வாதாரம் தொடர்புடையது என்றும் சுஷ்மா தெரிவித்தார்.

இத்தாலி கடற்படையினர் விவகாரத்தையும், தமிழக மீனவர் விவகாரத்தையும் ஒப்புமைப்படுத்தி பார்க்க வேண்டாம் என்றும், இரு விவகாரங்களும் வெவ்வேறானவை என்றும் சுஷ்மா குறிப்பிட்டார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தத் தகவலை இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையது அக்பரூதின் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

மீனவர் விவகாரத்தில், இந்தியாவின் நிலைப்பாட்டை இலங்கைப் பிரதமரிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா தெரிவித்துள்ளார். இந்தியாவின் நிலைப்பாட்டை அவரும் (இலங்கை பிரதமர்) புரிந்து கொண்டுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

மீனவர் விவகாரம் என்பது கடினமானதாகும். இதற்கு உடனடியாகத் தீர்வு காண முடியாது. பெரிய பிரச்னைக்கு தீர்வு காணும் வரை, இடைக்காலத் தீர்வுகளுக்கு முயற்சிகள் எடுத்து வருகிறோம்.

மீனவர் பிரச்னை தொடர்பாக இரு நாடுகளைச் சேர்ந்த மீனவர்களும் சந்தித்துப் பேச வேண்டும். ஆனால், பிரதமர் மோடி இலங்கையில் அடுத்த வாரம் சுற்றுப்பயணம் செய்வதால், இந்தப் பேச்சுவார்த்தையை அவரது பயணத்துக்கு முன்னதாக நடத்த வாய்ப்பில்லை. ஆகையால், பிரதமரின் பயணத்துக்குப் பிறகு, இரு நாடுகளின் மீனவர்களும் சந்தித்துப் பேசுவது தொடர்பான தேதியை முடிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றார் அவர்.

இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை: இதனிடையே, இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீராவையும் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்துப் பேசினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணம் தொடர்பாகவும், அவரது பயணத்தின்போது கையெழுத்திடப்பட இருக்கும் ஒப்பந்தங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மீனவர் விவகாரம் குறித்து சுஷ்மா பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை.

இதேபோல், சுஷ்மா ஸ்வராஜை இந்திய வம்சாவளித் தமிழர் தலைவர்கள், இலங்கைத் தொழிலாளர்கள் காங்கிரஸ், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் சந்தித்துப் பேசினர்.

தமிழ் தேசிய கூட்டணித் தலைவர்களுடன் சந்திப்பு: தமிழ் தேசிய கூட்டணித் தலைவர்களும், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து மீனவர் விவகாரம் தொடர்பாக பேசினர். இதுதொடர்பாக தமிழ் தேசிய கூட்டணித் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்ததாவது:

இலங்கையைச் சேர்ந்த தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விஷயம் இதுவாகும். இதற்கு தீர்வு காண வேண்டியது அவசியமாகும். இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் தமிழக மீனவர்கள் சுடப்படுவார்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருக்கிறார். இறையாண்மையை பாதுகாக்கும் உரிமை, அனைத்து நாடுகளுக்கும் உண்டு. ஆனால், தனது இந்த கருத்துப்படி அவர் நடவடிக்கை எடுப்பாரா? என்று உறுதியாக தெரிவிக்க இயலாது. இந்த விவகாரம், பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply