விடுதியில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு: மாலி நாட்டில் 5 பேர் பலி
மேற்கு ஆப்பிரிக்கா நாடான மாலியில் உள்ள விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு வெளிநாட்டினர் உள்பட ஐவர் உயிரிழந்தனர். மாலி தலைநகர் பமாகோவில் வெளிநாட்டினர் கூடும் விடுதியில் சனிக்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்தது. வாடிக்கையாளர்கள் அதிகமாகக் கூடியிருந்த வேளையில் அந்த விடுதிக்குள் முகமூடி அணிந்த மர்ம நபர் துப்பாக்கியுடன் நுழைந்தார். அங்கு உணவருந்திக் கொண்டிருந்தவர்கள் மீது சரமாரியாகச் சுடத் தொடங்கினார்.
அந்தத் தாக்குதலில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு நபர், பெல்ஜியமைச் சேர்ந்த ஒரு நபர் உள்பட ஐவர் உயிரிழந்தனர். ஒன்பது பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் இருவர் ஐ.நா. படை வீரர்கள். இவர்கள் இருவரும் சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த வீரர்கள் என அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை பின்னர் அறிவித்தது.
இரு மர்ம நபர்கள் அந்தத் தாக்குதலை நடத்திவிட்டு, வெளியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் தப்பியோடியதாக சம்பவத்தை நேரில் கண்ட சிலர் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை மேற்கொள்ள, விடுதியைச் சேர்ந்த இருவரை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
அந்நாட்டின் வட கிழக்குப் பகுதி, அல்-காய்தா தொடர்புடைய தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. 2013-ஆம் ஆண்டு பிரான்ஸ் ராணுவத்தின் தலைமையில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில், தீவிரவாதிகள் அங்கிருந்து விரட்டப்பட்டனர்.
அவ்வப்போது சிறு மோதல்கள் நிகழ்ந்து வரும் அந்தப் பகுதியில், மாலி ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன. மாலியின் பிற பகுதிகளில் வன்முறை எதுவும் நிகழ்ந்ததில்லை என்ற நிலையில், தலைநகரில் ஐவரை பலி கொண்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply