கற்பழிப்பு குற்றங்களை தடுக்க சட்டத்தில் மாற்றம் தேவை: பெண்கள் தினவிழாவில் குஷ்பு பேச்சு

தமிழக மகளிர் காங்கிரஸ் சார்பில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. மாநில தலைவி சாய்லெட்சுமி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ராணி வெங்கடேசன் முன்னிலை வகித்தார். யசோதா வரவேற்றார்.நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகை குஷ்பு பேசியதாவது:–பெண்ணாக பிறந்ததற்கு பெருமைப்பட வேண்டும். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் சக்தி இருக்கிறது. சாதிக்க முடியும். நான் திரைப்படத் துறையில் இருப்பதால் வெளியே தெரிகிறது. இந்த சமூகத்தில் பல பெண்கள் சாதித்து இருக்கிறார்கள். அவர்களை வெளிக்கொண்டு வரவேண்டும்.நாட்டில் ஆணாதிக்கம் அதிகம். ஆனால் பெண்களால் சாதிக்க முடியாத விசயம் ஏதுமில்லை.

இருந்தாலும் பெண்களுக்கு மரியாதை தருவதில்லை. பாதுகாப்பு இல்லை. பெண்கள் சமுதாயத்துக்கு பயந்துதான் வாழ்கிறார்கள். நான் சொல்வது நீங்கள் உங்கள் மனசாட்சிக்கு மட்டும் பயப்படுங்கள். பெண்களுக்கு கல்வி முக்கியம். வீட்டில் எல்லா பிள்ளைகளையும் படிக்க வையுங்கள். எல்லா வேலைகளையும், ஆண் பிள்ளையையும், பெண் பிள்ளையையும் செய்ய வையுங்கள்.பெண்கள் வெளியே தனியே செல்ல பயம். 6 மணிக்கு மேல் வெளியே போகக்கூடாது, இப்படித் தான் டிரஸ் போட வேண்டும், ஆண்களிடம் பேசக் கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடு உள்ளது. எப்படி கட்டுப்பாட்டுடன் நடக்க வேண்டும் என்று பெண்களுக்கு தெரியாதா? உங்கள் மனசாட்சிக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்யுங்கள். நம் நாட்டில் 20 நிமிடங்களுக்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள். சட்டங்கள் மாறாதவரை கற்பழிப்பு குற்றங்கள் நடக்கத்தான் செய்யும்.

பெண்கள் தனக்காக போராடினால்தான் சாதிக்க முடியும். இல்லத்தரசி என்று சொல்வதற்கு வெட்கப்படாதீர்கள். உலகைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குள் லட்சுமி, துர்க்கா இருக்கிறாள். நிச்சயம் சாதிக்க முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் பெண் சாதனையாளர்கள் டாக்டர் சாந்தா, ஜெயா அருணாசலம், ஏ.எஸ்.பொன்னம்மாள், அனுராதா ரவிராஜ் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு வரலட்சுமி இளங்கோவன், ஜெயந்தி தங்கபாலு, தமிழ்செல்வி வசந்தகுமார் ஆகியோர் விருது வழங்கினார்கள்.சாரதாநம்பி ஆரூரன், சரஸ்வதி ராமநாதன், சி.ஆர்.மஞ்சுளா, விஜயதாரணி எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

விழாவில் சுமதி அன்பரசு, ஆலிஸ்மனோகரி, இமயா கக்கன், ஹசீனா சையத், மீனாவெங்கட்ராமன், சரஸ்வதி நாலடியார், முன்னாள் எம்.எல்.ஏ. செல்வ பெருந்தகை, மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ராயபுரம் மனோ, வி.ஆர்.சிவராமன், ரங்கபாஷ்யம் மற்றும் சிரஞ்சீவி, தணிகாசலம், கோபண்ணா, பிராங்கிளின் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply