அத்துமீறும் இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடரும் வட மாகாண மீனவப் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி உறுதி

இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் இந்திய மீனவர்களை கைதுசெய்யும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என வடமாகாண மீனவர் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிமொழி வழங்கியுள்ளார். இலங்கை கடற்பரப்புக்குள் வந்து இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப் பதாகக் கூறப்படுவது வெறும் வதந்தியே என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் வடமாகாண மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக விசேட கூட்டமொன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். வடமாகாண அரசியல் பிரதிநிதிகள் மற்றும் மீனவசங்கப் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

வடமாகாண மீனவ மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் மிகத் தெளிவாக முன்னிக்கிறது. இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழையும் இந்திய மீனவர்களை கைதுசெய்யும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளதுடன், இந்திய மீனவர்களுக்கு எமது கடற்பரப்புகுகள் மீன்பிடிப்பதற்கு இடமளித்துள்ளதாகப் பரப்பப்பட்டிருக்கும் வதந்திகள் உடனடியாகத் திருத்தப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, வடமாகாண மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக தனது இந்திய விஜயத்தின்போது இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியைச் சந்தித்து அவருடன் நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தியிருந் ததாகக் கூறினார். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக முழு அளவில் இந்தியா விடமிருந்து ஒத்துழைப்புக் கிடைக்கும் என நம்புவதாகவும் கூறினார்.

இலங்கை இந்திய உறவில் எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு இந்தப் பிரச்சினைக்கு தெளிவானதொரு தீர்வை பெற்றுக்கொள்வதே தனது இலக்கு என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். வடமாகாண மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வடபகுதி அரசியல் பிரதிநிதிகளின் உதவியும் ஒத்துழைப்பும் அவசியம் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கடற்றொழில் அமைச்சு வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு என்பவற்றின் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயம் தொடர்பாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானி கருடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதன் முக்கியம் தொடர்பாகவும் அவர் தெளிவுபடுத்தினார். இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடிப்பதால் வடபகுதி மீனவர்களின் பொருளாதாரம் பாரியளவில் பாதிக்கப்படுகிறது. இழுவைப்படகுகள் மூலம் அவர்கள் மீன்பிடிப்பதற்கான ஒழுங்கு விதிகளை மீறியது மட்டுமல்ல கடல்வளம் உள்ளிட்ட சுற்றாடலையும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளனர் என்றும் கூறினார்.

நாட்டில் வேறு பகுதிகளுக்குச் சென்று வடபகுதி மீனவர்கள் தொழிலில் ஈடுபடுவ தால் மீனவர்கள் பலபிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுகிறது. இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்குத் தேவையான வேலைத்திட்டத்தைத் தயார்ப்படுத்துமாறு கடற்றொழில் அமைச்சுக்கும் வடமாகாண சபைக்கும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

வடபகுதி மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வடமாகாண சபைக்கு அதிகாரம் இருக்கிறது என்று தெரிவித்த ஜனாதிபதி, எவ்வேளையிலும் மத்திய அரசு தலையீடு செய்யப்போவதில்லையென்றும் கூறினார். கடற்றொழில் சட்டம் வெகுவிரைவில் திருத்தப்பட்டு அதைப் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

கடந்த ஆட்சிக்காலத்தைவிட பாரியளவில் வேலைத்திட்டங்கள் மீனவர் சமுதாயத்துக்கென செய்யப்பட்டுள்ளது. இதற்கு தற்போதைய அரசு அர்ப் பணிப்புடன் செயற்படுகிறது என்றும் தெரிவித்தார். கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான இரா.சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், வடமாகாணசபை அமைச்சர் டனீஸ்வரன், கடற்படை உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply